You are here
Home > Uncategorized > ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவமதிக்கும் கார்ட்டூனை நீக்க மத்திய அரசுக்கு ராமதாஸ், வைகோ கோரிக்கை!

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவமதிக்கும் கார்ட்டூனை நீக்க மத்திய அரசுக்கு ராமதாஸ், வைகோ கோரிக்கை!

சென்னை:அரசியல்வாதிகள் மத்தியில் கார்ட்டூன் ஏற்படுத்தும் பிரச்சனை முடிந்தபாடில்லை. ஏற்கனவே அம்பேத்கர்-நேரு குறித்து என்.சி.இ.ஆர்.டி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கார்ட்டூன் அம்பேத்கரை இழிவுப்படுத்துவதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக கார்ட்டூன் இடம்பெற்றிருந்த பாடம் நீக்கப்பட்டது. தற்பொழுது என்.சி.இ.ஆர்.டியின் 12-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் இடம் பெற்றுள்ளதாக கூறி ராமதாசும், வைகோவும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனராம்.

வைகோ தனது கடிதத்தில் கூறியிருப்பது: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (என்.சி.இ.ஆர்.டி.) வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 153-ம் பக்கத்தில், விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூன் உள்ளது.

மாணவர்கள் மொழிப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது, கட்டாய ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. வரலாற்று உண்மையைத் திரித்துக் கூறும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வைர வரிகளில் இடம் பெற்றுள்ளது.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இந்த கார்ட்டூனை உடனடியாக நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ் கூறியிருப்பது: ஹிந்தியின் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கார்ட்டூனில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

1967-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்தப் போராட்டம்தான் அடிப்படையாக இருந்தது.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த கார்ட்டூனை பாடப் புத்தகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top