You are here
Home > Uncategorized > ஊழல்:ஐ.மு அரசில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

ஊழல்:ஐ.மு அரசில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

புதுடெல்லி:ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமாச் செய்துள்ளார். மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வீரபத்ர சிங் தனது பதவியை நேற்று(செவ்வாய்க்கிழமை) ராஜினாமாச் செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர், கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்தார். வீரபத்ர சிங் வகித்து வந்த பொறுப்பை அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூடுதலாகக் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

78 வயதாகும் வீரபத்ர சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இமாசலப் பிரதேச முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.

பதவியை ராஜிநாமா செய்தது குறித்து வீரபத்ரசிங் கூறியது: தார்மீக அடிப்படையில் பதவியில் இருந்து விலகியுள்ளேன். பதவி விலகுமாறு என்னிடம் யாரும் கூறவில்லை. எனது கட்சிக்கோ, பிரதமருக்கோ அல்லது மத்திய அரசுக்கோ என்னால் பிரச்னை ஏற்படக் கூடாது என்று கருதுகிறேன். எனவே தானாகவே முன்வந்து பிரதமரிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்தேன்.

இதனால் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று அர்த்தமல்ல. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். இமாசலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அழிக்க சதி செய்கிறது’ என்றார் வீரபத்ர சிங்.

முன்னதாக திங்கள்கிழமை மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்தார். அதன் பிறகு தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பேட்டியளித்தார்.

இந்நிலையில் அடுத்த நாளிலேயே பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

1989-ம் ஆண்டு இமாசல முதல்வராக வீரபத்ர சிங் பதவி வகித்தார். அப்போது சில தொழிலதிபர்கள் அந்த மாநிலத்தில் தொழில் தொடங்க நிலம் கேட்டனர். நிலம் ஒதுக்க பணம் தர வேண்டுமென்று வீரபத்ர சிங் அவர்களிடம் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவி பிரதிபா சிங், ஐ.ஏ.எஸ். அதிகாரி மொஹிந்தர் லால் ஆகியோர் உடனிருந்ததாகத் தெரிகிறது. இந்த உரையாடல் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ சி.டி.யை காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கட்சியில் வீரபத்ர சிங்கின் எதிர் முகாமில் இருப்பவருமான விஜய் சிங் மங்கோட்டியா 2007-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டார். இது தொடர்பாக 2009-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம், இப்போது அமைச்சரின் பதவியைப் பறித்துள்ளது.

அந்த சி.டி.யை தடயவியல் சோதனைக்கு அனுப்பிய நீதிமன்றம், அதில் உள்ள உரையாடல் பதவி போலியானது அல்ல என்பதை உறுதி செய்தது. இதையடுத்து, வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் ஆகியோர் மீது கூறப்பட்டுள்ள ஊழல், சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்கள் இருக்கிறது. எனவே, அவர்கள் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது என்று இமாசலப் பிரதேச சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதனால் வீரபத்ர சிங் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் மூன்றாவது அமைச்சர் வீரபத்ர சிங். இதற்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்தனர்.

வீரபத்ரசிங்கின் ராஜினாமாக் குறித்து காங்கிரஸ்கட்சி கருத்து தெரிவிக்கையில்,  “தன்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் தார்மிக அடிப்படையில்தான் வீரபத்ர சிங் ராஜிநாமா செய்துள்ளார். இதனால் அவர் குற்றம் செய்துள்ளார் என்று அர்த்தமாகிவிடாது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நடந்திருந்தால்தானே நிரூபிக்க முடியும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் துவிவேதி கூறியுள்ளார்.

Leave a Reply

Top