You are here
Home > Uncategorized > ஸ்தம்பித்தது ஸ்பெயின்! மாண்ட்ரிடில் துவங்கிய மக்கள் திரள் போராட்டம்!

ஸ்தம்பித்தது ஸ்பெயின்! மாண்ட்ரிடில் துவங்கிய மக்கள் திரள் போராட்டம்!

மாண்ட்ரிட்:பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்து வரும் ஸ்பெயின் அரசு திவால் ஆவதிலிருந்து தப்பிக்க பல்வேறு கடுமையான பொருளாதார சீர்திருத்த மற்றும் சிக்கன நடவடிக்கைகளை கடந்த ஓர் ஆண்டாக மேற்கொண்டு வருகின்றது.

தற்பொழுது நிலவிவரும் நிதி சிக்கலுக்கு அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என அந்நாட்டு மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர்.

மக்கள் நலன் கருதி ஆட்சி செய்யாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களை வாட்டிவதைத்து வருவதாக அவர்கள் அரசின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி மே-15 எதிர்ப்பு இயக்கத்தின் முதல் நினைவுநாளில் தங்கள் கோபத்தை வெளிபடுத்த தீர்மானித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பெயின் தலைநகர் மாண்ட்ரிடில் பூர்ட்டா டெல் சோல் பிளாஸாவில் சுமார் 30000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முன்வராத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாண்ட்ரிடில் மட்டுமில்லாது  வேலன்சியாவில் 8 ஆயிரம், பார்சிலோனாவில் 22 ஆயிரம், செவில்லியில் 2 ஆயிரம் என்று நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டம் ஸ்பெயினை போல் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காது என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Top