You are here
Home > Uncategorized > தலித் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்காக போராடுவேன்: ராம்தேவின் புதிய வித்தை!

தலித் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்காக போராடுவேன்: ராம்தேவின் புதிய வித்தை!

புதுடெல்லி:தலித் முஸ்லிம்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை தடைச்செய்யும் அரசியல் சட்டத்தின் 341-ஆம் பிரிவை திருத்த போராட்டத்தை துவங்கப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவரக் கோரியும், ஊழலுக்கு எதிராகவும் ஜூன் 3-ஆம் தேதியும், ஆகஸ்ட் மாதமும் போராட்டம் நடத்தப்படும் என்று ராம்தேவ் கூறினார். அகில இந்திய முஸ்லிம் மோர்ச்சா நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

சாதாரண மக்களை கவனிக்காத, நாட்டின் வளத்தை கொள்ளையடிப்பதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளை விமர்சித்த ராம்தேவ், தன் மீது படிந்துள்ள ஹிந்துத்துவா இமேஜை களைய முஸ்லிம் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் ராம்தேவ் கூறியது: முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே சிலர் சுவரை கட்ட முயலுகின்றனர். இத்தகைய நபர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். தலித் முஸ்லிம்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் அரசியல் சட்டத்தின் 341-ஆம் பிரிவு இடஒதுக்கீட்டை வழங்க கூடாது என்று கூறுவது அண்மைக்காலம் வரை எனக்கு தெரியாது. அது சரியான நடவடிக்கை அல்ல. ஹிந்து என்றாலும், முஸ்லிம் என்றாலும், கிறிஸ்தவர் என்றாலும் தலித் தலித்துதான். அனைத்து தலித்துகளுக்கும் சமமான உரிமை கிடைக்கவேண்டும். அதற்காக போராட்டம் நடத்துவேன்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னரே திட்டமிட்ட நிபந்தனைகள் உள்ளன. அதனை திருத்தவேண்டும். முஸ்லிம் சகோதரர்களுடன் நான் உள்ளேன். எனது ஆசிரமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். அங்கு மதம் இல்லை. கோயில் இல்லை. மஸ்ஜிதும் இல்லை. நாங்கள் அனைவரும் அங்கு ஒன்றாகும். இவ்வாறு ராம் தேவ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலித் தலைவர் உதித் ராஜ், முன்னாள் எம்.பி இல்யாஸ் ஆஸ்மி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

சங்க்பரிவார இயக்கங்களுடன் நெருக்கமாக இருக்கும் ஹைடெக் சாமியாரான ராம்தேவ் முஸ்லிம்களை கவர புது டெக்னிக்கை உபயோகிக்க துவங்கியுள்ளார் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஹிந்து கலாச்சாரத்துடன் பவனி வரும் ராம்தேவ் தலித்துகள் எங்கு சென்றாலும் விடுதலை கிடையாது அவர்கள் தலித்துகளாகத்தான் வாழ முடியும் என்று தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையிலேயே அவரது பேச்சின் தொனி அமைந்துள்ளது.

இஸ்லாத்தை பொறுத்தவரை எவர் ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக அதனை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் உலக முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாவார். இந்தியாவில் தலித்து மக்களுக்கு விடுதலைப்பெற்று தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும். தமிழகத்தின் தந்தை பெரியார் கூட இன அழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top