You are here
Home > Uncategorized > 2 கழிப்பறைகளை புதுப்பிக்க 35 லட்சம்!

2 கழிப்பறைகளை புதுப்பிக்க 35 லட்சம்!

புதுடெல்லி:இரண்டு கழிப்பறைகளை புதுப்பிக்க 35 லட்சம் ரூபாய் செலவழித்த திட்ட கமிஷனின் நடவடிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திட்டக்கமிஷனின் தலைமையகம் அமைந்துள்ள யோஜனா பவனில் இரண்டு கழிப்பறைகளை புதுப்பிக்க 35 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக கணக்கில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சுபாஷ் அகர்வால் என்பவர் அளித்த மனுவிற்கு கிடைத்துள்ள பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கழிப்பறை கதவுகளுக்கு டோர் ஆக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டம் நிறுவியதற்கு 5.19 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு டோர் ஆக்ஸஸ் கண்ட்ரோல் சிஸ்டம் நிறுவியுள்ளதால் ஸ்மார்ட் கார்ட் இருப்பவர்கள் மட்டுமே இதனை உபயோகிக்க இயலும். கமிஷனின் 60 உறுப்பினர்களுக்கு ஸ்மார் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கிடைத்த இன்னொரு தகவல் என்னவெனில், திட்டக் கமிஷனின் துணைத்தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரையிலான வெளிநாட்டு பயணங்களுக்கு தின அடிப்படையில் கணக்கிட்டால் 2.02 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாம்.

இன்னொரு தகவலின் படி 2004 ஜூன் முதல் 2011 ஜனவரி(274 நாட்கள்) வரையிலான அலுவாலியாவின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு 2.34 கோடி செலவாகியுள்ளதாம்.

ஆனால், அலுவாலியா கூறுகையில், இந்த பயணங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற தேவையானதாகும் என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Top