You are here
Home > Uncategorized > பா.ஜ.க ஆட்சியில் மத்திய பிரதேசம் பின் தங்கிய மாநிலம்!

பா.ஜ.க ஆட்சியில் மத்திய பிரதேசம் பின் தங்கிய மாநிலம்!

போபால்:பாஜக ஆட்சியில் மத்தியப் பிரதேசம் இன்னமும் பின்தங்கிய மாநிலமாகவே நீடிக்கிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போபாலில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:பாஜக ஆட்சி செய்து வரும் மத்தியப் பிரதேச அரசின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு மோசமான புள்ளி விவரங்களே சான்றாகும். மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு ஏராளமான சாதனைகளை செய்துள்ளதாக கூறிக் கொள்கிறது.

ஆனால் உண்மையில் அந்த மாநிலம் இன்னமும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. நாட்டிலேயே பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தில் குறைவான சதவிகிதத்தில் மத்திய பிரதேச மாநிலம் உள்ளதாக போலியான தகவல்கள் மூலம்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012இல் எடுக்கப்பட்ட 10 ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 56ஆக உள்ளது தெரியவந்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் சதவீதம் 53.55இல் இருந்து 60ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இரும்புச்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவீதம் 47இல் இருந்து 57ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் வெளியிட்ட அறிக்கையின்படி 1 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதும், 14 லட்சம் குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது. மேலும், குழந்தைத் தொழிலாளர்களையும், குறிப்பாக பெண்களையும் சுரண்டுவதில் மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் தைரியம் இல்லை என்றார் அமைச்சர் கபில் சிபல்.

Leave a Reply

Top