You are here
Home > Uncategorized > IFF தம்மாம் தமிழ் பிரிவு நடத்திய குழந்தை வளர்ப்பு வழிகாட்டி முகாம்!

IFF தம்மாம் தமிழ் பிரிவு நடத்திய குழந்தை வளர்ப்பு வழிகாட்டி முகாம்!

தம்மாம்: இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் (IFF), தம்மாம் – தமிழ் பெண்கள் பிரிவின் சார்பாக “குழந்தை வளர்ப்பு – வழிகாட்டி முகாம்” தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்ட் கலை அரங்கில் வைத்து நடத்தப்பட்டது.

ஜனவரி 9, 2014 வியாழன் அன்று நடந்த இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரி ஜெரினா ராணா திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதினார். IFF செய்து வரும் பணிகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பை சகோதரி இஸ்மாஈல் திப்பு சுல்தான் வழங்கினார்.

அவர் IFFன் பெண்கள் பிரிவினர் செய்து வரும் பணிகள் பற்றி அழகாக தொகுத்துரைத்தார். ஹஜ் காலகட்டத்தில் IFFன் பெண் தன்னார்வ தொண்டர்கள் பெண் ஹாஜிகளுக்கு செய்து வரும் பணிகள் மற்றும் சமூகத்திற்கு ஆற்றி வரும் இன்னபிற பணிகளை குறித்தும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த டாக்டர் அபர்ணா குமரன் (M.D., Ph.D) அவர்கள் குழந்தை வளர்ப்பு – வழிகாட்டி முகாம் பயிற்சி வகுப்பினை தொடங்கினார். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி தமிழ் பெண்கள் சார்பாக நடத்தப்படுவது இது முதல் முறை என்றும், இவ்வளவு பெண்கள் வருவார்கள் என தான் நினைத்திருக்கவில்லை என்றும் கூறி, தனது வகுப்பினைத் தொடங்கினார் டாக்டர்.

குழந்தை வளர்ப்பு பற்றிய ஏராளமான உரைகளையும், புத்தகங்களையும் படித்திருந்தவர்களுக்குக் கூட இந்தப் பயிற்சி வகுப்பு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. நிகழ்ச்சி வெறும் உரையாக மட்டுமல்லாமல், இடையிடையே பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு தாயும் மகளும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று வந்திருந்தவர்களைக் கொண்டே நடிக்க வைத்து காண்பித்ததும், அதில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன, எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என நடிப்பால் விளக்கியதும் சிறப்பாக இருந்தது.

மேலும், குழந்தை வளர்ப்பை 1 முதல் 7 வரையுள்ள குழந்தைகள், 7 முதல் 12 வரையுள்ள குழந்தைகள் மற்றும் 12 முதல் 18 வரையுள்ள பிள்ளைகள் என 3 பிரிவாகப் பிரித்து இவர்களை எவ்வாறு கையாள வேண்டும், எவ்வாறான தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்பனவற்றை மிக அழகான உதாரணங்களுடன் தெளிவாக விளக்கினார்.

இறுதியாக, அவர் காண்பித்த Children See, Children Do என்ற குறும்படம் நம் குழந்தைகள் நம்மை எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதை வந்திருந்தவர்களுக்கு தெளிவாக உணர்த்தியது. அதனைத் தொடந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பங்கு பெற்ற சகோதரிகள் தங்கள் கேள்விகளை டாக்டரிடம் கேட்க அவர் அப்போதே விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தமைக்காக டாக்டர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை IFF தம்மாம் பெண்கள் பிரிவு தலைவர் சகோதரி தாஃபிலா ஸாதிக் மீரான் வழங்கினார். தொடர்ந்து சகோதரி சாமிலா பிலால் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சகோதரி ஃபஹ்மிதா சிராஜுத்தீன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மற்றொரு பகுதியில் குழந்தைகளுக்கு படம் வரைதல், வண்ணம் பூசுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகமதிகம் நடத்தப்பட வேண்டும், முழுநாள் நிகழ்சியாக நடத்தப்பட வேண்டும், குழந்தைகளுக்கும் இது போன்ற பயிற்சிகள் தேவை போன்ற கருத்துகளை தங்களது கருத்துப் படிவத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Top