You are here
Home > Uncategorized > மோடியின் உளவுப் பார்வையில் குஜராத்! அந்தரங்கங்களில் அத்துமீறல்! டி.ஜி.பி.க்கு கூட தெரியாமல் ஒரு லட்சம் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு!

மோடியின் உளவுப் பார்வையில் குஜராத்! அந்தரங்கங்களில் அத்துமீறல்! டி.ஜி.பி.க்கு கூட தெரியாமல் ஒரு லட்சம் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு!

புதுடெல்லி: பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் குஜராத் போலீசின் உளவுப் பார்வை குஜராத் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. மோடிக்கு எதிர் கருத்துடையோரும், எதிர்ப்பவர்களும் முழு நேரமும் கண்காணிக்கப்படுகின்றார்கள்.

அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என யாரையும் விட்டு வைக்காமல் மோடியின் போலீஸ் அவர்களுடைய தகவல்களை ரகசியாமாக வேவு பார்த்து வருகிறது.

மோடியுடன் தொடர்புடைய பெங்களூரைச் சார்ந்த இளம் பெண் ஒருவரையும், இவர்களிடையேயான தொடர்பை அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தொலைபேசி அழைப்புகளையும் வேவு பார்க்க 24 மணி நேரமும் போலீஸை உபயோகித்த மோடியின் செயல் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை குஜராத் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்குக் கூட தெரியாமல் மோடியின் ஒற்றர்கள் ஒட்டுக் கேட்டுள்ளனர். பணியில் இருக்கும்போது கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்த முன்னாள் டி.ஜி.பி. அமிதாப் பதக் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

வழக்கு தொடர்பான காரியங்களுக்கு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க சில அளவுகோல்களை பேண வேண்டும். ஆனால், எவ்வித எழுத்து மூலமான உத்தரவும் இல்லாமலேயே குஜராத்தில் குடிமக்களின்  அந்தரங்க விஷயங்களை மோடி கண்காணித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமிதாப் பதக், எஸ்.பி. ரேங்கிற்கு குறையாத அதிகாரிகள் எழுத்து மூலம் நடவடிக்கை முறைகளை கடைப்பிடித்து தேவைப்பட்டால் மட்டுமே மொபைல் ஃபோன் விபரங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

முறையான நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் பயனாளர்களின் மொபைல் ஃபோன் டேட்டாக்களை அளிக்க முடியாது என்று முடிவு எடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மோடி அரசு குஜராத்தில் புறக்கணித்துள்ளது. அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு எல்லாம் இதர நிறுவனங்களின் மொபைல் கனெக்‌ஷன் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டத்தை கடைப்பிடிப்போம் என்று பி.எஸ்.என்.எல். கூறும்போது, இதர நிறுவனங்கள் மோடியின் போலீஸ் கேட்டவுடன் தகவல்களை கசிய விட்டுள்ளன.

மோடி தனக்கு பிடிக்காத அதிகாரிகளை ஒடுக்க நினைத்தால் நேரடியாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா, மோடியின் எதிராளியான ஹரேன் பாண்டியா ஆகியோரின் மொபைல் ஃபோன் விபரங்களை கசியச் செய்ய மோடியே நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதனை ஸ்ரீகுமார் குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி கமிஷன் முன்பாக தெரிவித்துள்ளார்.

ஹரேன் பாண்டியா 2003-ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் மக்கள் நெரிசல் மிக்க பூங்காவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பாண்டியாவின் தொலைபேசி அழைப்புகளை மோடி போலீஸ் ஒட்டுக் கேட்டதாகவும், அவருடைய நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்ததாகவும் குஜராத் இனப்படுகொலை வழக்குகளை குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில், குஜராத்தில் பெரும்பாலான உயர் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். மொபைல் ஃபோன் வழியாக முக்கிய தகவல்களை பரிமாறுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். மோடி மீதான அச்சத்தால் தொழிலதிபர்களும் பீதியில் உள்ளனர். பலரும் பி.எஸ்.என்.எல்.லின் லேண்ட் ஃபோனை தற்போது சார்ந்திருக்கின்றனர்.

Leave a Reply

Top