You are here
Home > Uncategorized > இன்று தமிழகத்தில் ஈதுல் ஃபித்ர் பெருநாள்! தலைவர்கள் வாழ்த்து!

இன்று தமிழகத்தில் ஈதுல் ஃபித்ர் பெருநாள்! தலைவர்கள் வாழ்த்து!

சென்னை:இந்தியாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினம் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் பசி, தாகம், உடல் இச்சைகளை தவிர்த்து, இரவு நேரங்களில் இறைவனை நின்று வணங்கி ஏழைகளுக்கு தான, தர்மங்களை வழங்கிய முஸ்லிம்கள் ரமலான் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள். இதனையொட்டி தலைவர்கள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி;

ரம்ஜான் திருநாளையொட்டி முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புனித குரான் கூறியுள்ள கொள்கைகளை பின்பற்றி உண்மையான, உத்தமமான வாழ்க்கையை மேற்கொள்ள தீர்மானிப்போம்.

உண்ணா நோன்பை முடித்துக் கொள்ளும் இந்த திருநாளானது, நம்மிடையே பகிர்ந்து கொள்ளுதல், ஈகை, அன்பு, கருணை, பரஸ்பர நட்பு, சமாதானம் போன்ற நற்குணங்களை பரப்பட்டும் என்றார் ஆளுநர்.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;
“பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோயாளிகளைச் சென்று பாருங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டுமெனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில்;
“இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்த அண்ணல் நபிகள் பெருமான், இனத்திமிரை, ஜாதித் திமிரை, நிறத் திமிரை, குலத் திமிரை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன் என்று அன்றே சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களுக்காக வீரமுழக்கமிட்டவர். அவர், “எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கி விட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்” என்று மொழிந்தவர்.

அதுமட்டுமல்லாமல், “தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் அரசை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு” எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர்.

அவர் போதித்த மணிவாசகங்களை மனதில் பதித்து, எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக” என்று கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி;
“பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ‘ஈதுல்’ பெருநாள் இந்நாள்.

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) சொன்ன அமுத மொழியைப் பின்பற்றி உருவமற்ற ஏக இறைவனை வணங்கியும், சகோதர சமயத்தாருடன் இணங்கியும் ஏழை எளியோர்க்கு வழங்கியும் வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்கவும், சமய நல்லிணக்கம் செழிக்கவும், வாழையடி வாழையெனத் தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தைப் பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளை இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று வாழ்த்தியுள்ளார் வைகோ.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
“இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. இதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் ஒரு சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்.

இஸ்லாமியர்கள் சமூக, பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ளனர். அவர்களை முன்னேற செய்வது ஒரு முற்போக்கான அரசின் கடமையாகும். இன்று சிறுபான்மை இனத்தவராக உள்ள அவர்களுக்கு உரிய பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது.

அஸாமில் நடைபெற்ற கலவரமும், அதன் விளைவாக இதர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளும் கவலை அளிப்பதாக உள்ளன. இஸ்லாம் சமுதாயத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு அரசு மட்டுமல்ல, பெரும்பான்மையான சமுதாயத்தினரின் கடமையும் ஆகும். அந்த வகையில் வகுப்பு ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்ற அதே நேரத்தில், அனைத்து சமுதாயத்தினரும் ரம்ஜான் விழாவில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதன் மூலமே சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக குறைக்க முடியும். இதை வலியுறுத்தும் தே.மு.தி.க. சார்பில் பிறர்க்கு கொடுத்து உதவும் பெரும் பண்பை போற்றும் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
“அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் ‘ஸஹாத்” என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் நேரு காலம் தொடங்கி இந்திரா, ராஜீவ், ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களது

வழிநின்று இன்றைக்கு சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின் வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களது நலனுக்கென்று 165 பணிகளுக்கு மொத்தம் பல்லாயிரம் கோடி
செலவிடப்படுகிறது.

இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர்அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில்;
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல் உபதேசமான குர்ஆனில் அருளப்பட்ட போதனைகள் அனைத்தையும் இந்நாளில் நினைவு கூர்ந்து, அவற்றை கடைபிடிக்க உறுதியேற்போம். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறது இஸ்லாம். அதைப் பின்பற்றி இஸ்லாமியர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு தான, தர்மங்களை செய்கிறார்கள். ஆனால், இஸ்லாமியரில் பலர் வறுமையில் வாடும் நிலை உள்ளது.

அவர்களின் முன்னேற்றத்திற்கான சச்சார் குழு பரிந்துரைகள் இன்னும் முழுமையாக செயல்படுத்தபடவில்லை. அவர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்பட்ட பற்றாக்குறையான இடஒதுக்கீட்டிற்கும் தடை விதிக்கப்பட்டிக்கிறது. இஸ்லாமியர்களின் குறைகள் அனைத்தும் களையப்பட்டு, அவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

எல்லாப் பாவங்களுக்கும் தாய் மது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பாவங்களுக்கு தாயான மதுவை அரசு விற்பனை செய்து மக்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாவத்தை ஒழிக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில்;

ரமலான் மாதத்தில் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி இறைவன் மீது மனதை ஒருமைப்படுத்தி மனித நேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு நிகரானதாகும். இனம், மொழி, கலாசாரம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரையும் ஒற்றுமையுடன் அரவணைத்து, பேணிக் காப்பது இந்திய நாட்டின் தனிச் சிறப்பாகும். சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்தோங்க அனைவரும் உழைப்போம்.

இந்திய தேசிய லீக் பொதுச்செயலர் ஜே. அப்துல் ரஹீம்:

திருகுர்ஆனை தனது வாழ்க்கை நெறியாகவும், சட்ட ஆலோசனையாகவும், இறையச்ச உணர்வோடும், இறைவணக்க வழிபாட்டோடும், திருமறையில் இறைவன் எதைச் செய்யச் சொன்னானோ, எதை தடுத்து உள்ளானோ அதன்படி ஆண்டு முழுவதும் நடந்து அமல் செய்வதே ரமலான் மாத நோன்பு இஸ்லாம் மக்களுக்கு தரும் பயிற்சிக் களம் ஆகும்.

இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநில தலைவர் ஒய். ஜவஹர் அலி:

வாழும் முறையை வகைப்படுத்தி தந்த வல்ல இறைவன் அல்லாஹூவின் பேரருளில் நனைந்து பெருமிதமாய் ரமலான் பெருநாள் கொண்டாடும் முஸ்லீம்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துச்செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Top