You are here
Home > தொடர்கள் > வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை​-2

வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை​-2

கல்வித்துறை-2:

இன்றைய கல்வித்துறையில் பள்ளிக் கூடங்களின்(School) பங்கு முக்கியமானது. தற்போதுள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் பள்ளிக் கல்வியே ஒருவருடைய கல்வி வாழ்க்கைக்கு அஸ்திவாரம் ஆகும். இதன் அடிப்படையிலேயே இன்று பள்ளி கல்வியானது தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதோடு அல்லாமல் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையும் பல இலட்சமாக உயர்ந்துள்ளது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகூடங்களை காண்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீரை காண்பதற்கு சமமாக உள்ளது. அந்த அளவிற்கு தடயம் இல்லாமல் இருக்கும் இந்த முஸ்லிம் சமூகம் தான் ஒரு காலத்தில் பள்ளிக் கூடங்களையே இவ்வுலகிற்கு சமர்ப்பணம் செய்தது என்பதை நினைவு கூர்ந்து செயலாற்றும் தருணம் இது.

பள்ளிக்கூடங்களின் தொடக்கம் ஓர் பார்வை:
இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களுடைய காலக்கட்டத்தில் அதாவது ஏழாம் நூற்றாண்டில், தற்போதைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரில் ஒன்பது இறை இல்லங்கள் இருந்தன. இந்த இறையில்லங்களில் இருந்து தான் 653-ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கூடம் உருவானது.

இஸ்லாத்தின் பரவுதலால் இந்த இறை இல்ல பள்ளிக்கூட திட்டமானது காட்டுத் தீ போன்று அன்றைய அரபுலகில் பரவியது.

கி.பி.744-ஆம் ஆண்டு சிரியாவின் டமாஸ்கஸில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனுடைய தாக்கம் தான் பிற்காலத்தில் டமாஸ்கசை உலக புகழ் பெறச் செய்தது. மேலும் இத்திட்டம் எட்டாம் நூற்றாண்டில் அன்றைய இஸ்லாமிய ஸ்பெயினில் கார்டோபா நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. (இந்த கார்டோபா நகரம் தான் பிற்காலத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டத்திற்கே கல்வி ஒளி தந்தது என்பதை பின் வரும் தொடர்களில் காண்போம்).

ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த இறை இல்ல கல்வி திட்டமானது மேலும் விரிவடைந்து ஏறக்குறைய எல்லா இறை இல்லங்களிலும் தொடக்கப்பள்ளி செயல்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது.

653-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி திட்டம் இன்று இவ்வுலகில் எவ்வளவு மாற்றங்களையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நாம் கண்கூடாக காண்கின்றோம். ஆக இறை இல்லத்தில் இருந்து தொடக்க கல்வி தொடங்கியதன் மூலம் கல்வி துறையில் முஸ்லிம்களின் பங்கினையும் இஸ்லாம் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தினையும் உணர முடிகின்றது.

பத்தாம் நூற்றாண்டில் இந்த இறையில்ல பள்ளிக்கூடத் திட்டமானது பள்ளிவாசல்களில் இருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கு மாறியது. இந்த மாற்றமே பிற்காலத்தில் பள்ளிக்கூடங்கள் உருவாக காரணமாக அமைந்தது. அந்த காலக்கட்டங்களில் பாரசீக பகுதிகளில் ஏராளமான பயிலகங்கள் ஆசிரியர்களின் வீடுகளில் நடைபெற்றது.

1066 ஆம் ஆண்டு பாக்தாத் செல்ஜூக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பாக்தாத் மன்னராக இருந்த நிஜாம் அல்மூலுக் பள்ளிக்கூடத்திற்கு என்றே பிரத்யேகமாக தனி கட்டிடத்தை கட்டினார். இப்படி தனி கட்டிடமாக கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடமே உலகின் முதல் பள்ளிக்கூடமாகும்.

இதனை தொடர்ந்து பல முஸ்லிம்களின் கட்டிடங்கள் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டது. இந்த பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.  அதோடல்லாமல் ஆசிரியர்களுக்கான ஊதியமும் பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இன்றைய நாகரீக உலகில் மாணவர்கள் இலவச கல்விக்காக ஏங்குகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. காரணம் இன்று கல்வி மிகப்பெரிய வியாபாரமாக மாற்றப்பட்டது தான்.

தொடரும்…

ஹாரிஸ்

Leave a Reply

Top