You are here
Home > Uncategorized > டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை: நான்கு பேரும் குற்றவாளிகள்! நீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை: நான்கு பேரும் குற்றவாளிகள்! நீதிமன்றம் அறிவிப்பு!

புதுடெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் மாணவி ஒருத்தியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் குற்றவாளிகள் என தெற்கு டெல்லி சாகேத்தில் உள்ள விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று(புதன் கிழமை) இவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்படும்.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தெற்கு டெல்லி விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அவர்களின் தண்டனை விவரங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 11) அறிவிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் கன்னா தெரிவித்தார்.

நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் தொடர்பான இந்த வழக்கில், நீதிபதி அளித்த 230-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்த வழக்கில் முகேஷ் சிங் (26), வினய் சர்மா (20), பவன் குப்தா (19), அக்ஷய் தாகுர் சிங் (28) ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவை வருமாறு:

பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 376 (2),(ஜி) (கூட்டுப் பாலியல்), 377 (இயற்கைக்கு விரோதமாக குற்றம் இழைத்தல்), 395 (கொள்ளை), 396 (கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல்), 120பி (உள்நோக்கத்துடன் குற்றம் புரிதல்), 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்திச் செல்லுதல்), தவறான நோக்குடன் கடத்தி ரகசியமாக குற்றம் புரிதல் (365), 394 (வழிப்பறியில் ஈடுபடும்போது காயம் ஏற்படுத்துதல்), 412 (வழிப்பறியில் ஈடுபடும்போது சட்டவிரோதமாக சொத்துகளைக் கொள்ளையடித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பாலியல் தாக்குதல் சம்பவத்தின் போது மாணவிக்கு கொடுமை இழைத்தது மட்டுமன்றி, சம்பவ நாளில் பேருந்தில் உடனிருந்த அவரது நண்பரையும் தாக்கிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

ஆகவே, கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல் பிரிவின்படி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீங்கலாக, மேற்கண்ட 12 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி, போலீஸார் சுமத்திய குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது சார் கோட்டாட்சியரிடம் அளித்த மரண வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை நேர்ந்தபோது நேரில் பார்த்த அவரது நண்பர் அளித்த சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக (ஆறாவது நபர்) சேர்க்கப்பட்டிருந்த ராம் சிங் (34), விசாரணை காலத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி திஹார் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் மீது போலீஸ் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. நால்வருக்குரிய தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி யோகேஷ் கன்னா கூறினார்.

பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் சிங் தாகுர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்பை நண்பகல் 12.30 மணிக்கு நீதிபதி அளித்தார்.

நால்வரையும் “குற்றவாளிகள்” என்று நீதிபதி அறிவித்தவுடன் பவன் குப்தா கண்ணீர் விட்டு அழுதார். வினய் சர்மா, அக்ஷய் தாகுர் ஆகிய இருவரும் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் உறைந்தது போல காணப்பட்டனர்.

“நாங்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்” என்று முகேஷ் சிங் கண்ணீர் விட்டார்.

நீதிமன்ற அறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் குடும்பத்தினர், வழக்குரைஞர்கள், துணை மருத்துவ மாணவியின் பெற்றோர், மாணவியின் நண்பர், காவல் துறை அதிகாரிகள் இருந்தனர். நீதிமன்ற அறைக்கு வெளியே நூற்றுக்கணக்கில் செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், பொதுமக்கள் குழுமியிருந்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் நீதிமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவர் சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையம் ஒன்றில் கழிக்க தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Top