You are here
Home > Uncategorized > பதிப்புரிமை சட்டத் திருத்தம்:பாராளுமன்றத்தில் அங்கீகாரம்!

பதிப்புரிமை சட்டத் திருத்தம்:பாராளுமன்றத்தில் அங்கீகாரம்!

புதுடெல்லி:பதிப்புரிமை திருத்த மசோதாவிற்கு மக்களவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைவரும் இம்மசோதாவை ஆதரித்தனர். இம்மசோதா கடந்த 17-ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பாடலாசிரியர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள் போன்றவர்களுக்கு உரிமைத் தொகையில் (ராயல்டி) பங்கு கிடைக்கும் வகையில் பதிப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி தயாரிப்பாளர்களுக்கு படைப்பாளிகளை ஏமாற்ற முடியாது. பதிப்புரிமையின் உரிமையாளர்கள் படைப்பாளிகள் தாம் என இம்மசோதா பிரகடனப்படுத்துகிறது.

திரைப்படம், இசை ஆல்பம் போன்றவற்றின் தயாரிப்பாளரே அதன் பதிப்புரிமைக்கான உரிமைதாரராக இருந்து வருகிறார். இந்த நிலையை மாற்றி படைப்பாளிக்கு அந்த உரிமையை வழங்கும் வகையில் பதிப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.

“இந்தத் திருத்தத்தின் மூலம் ஏழ்மை நிலையில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் உரிய பங்கு கிடைக்கும்” என்று மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான், இசையமைப்பாளர் ரவி போன்றவர்கள் தங்களது இறுதிக் காலத்தில் வீட்டு வாடகையையும், மருத்துவமனைக் கட்டணத்தையும் கூடச் செலுத்த முடியாமல் வறுமையில் வாழ்ந்ததை சிபல் நினைவுகூர்ந்தார்.

படைப்புகளை ஒவ்வொருமுறை ஒலி, ஒளிபரப்பு செய்யும் போதும் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் உரிமைத் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று புதிய சட்டத் திருத்தம் வலியுறுத்துகிறது.

எழுத்து, நாடக, இசைப் படைப்புகள் வெளியாகி 5 ஆண்டுகள் வரை அதைத் தழுவிய படைப்புகள் வெளியாவது தடை செய்யப்படுகிறது.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஏகோபித்த வரவேற்புத் தெரிவித்தன.

இந்தச் சட்டத்தை மீறி படைப்புகளைத் திருடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும், ஆராய்ச்சிப் பணிகளுக்காக படைப்புகளை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Top