You are here
Home > Uncategorized > தோல்விகளை மறைக்கவே கெஜ்ரிவால் ராஜினமா! – காங், பாஜக குற்றச்சாட்டு!

தோல்விகளை மறைக்கவே கெஜ்ரிவால் ராஜினமா! – காங், பாஜக குற்றச்சாட்டு!

புதுடெல்லி: டெல்லியில் அமைக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதுமே ஆர்வம் காட்டவில்லை என்றும், தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தோல்வியை மூடி மறைப்பதற்காகவே பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீட்சித் வெள்ளிக்கிழமை கூறுகையில், “ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் நிர்வாகத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. இத்தனை காலமாக அவர் நடத்தி வந்த நாடகத்தை ராஜிநாமா மூலம் முடித்து வைத்துள்ளார். ஜன லோக்பால் விவகாரம் இல்லாவிட்டாலும், ஆட்சிப் பொறுப்பை விட்டு தப்பி ஓடுவதற்கும், தன்னை ஒரு தியாகி போல காட்டிக் கொள்வதற்கும் அவர் வேறு ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்திருப்பார்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத்துறை தலைவர் அஜய் மாக்கன் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மசோதா ஒப்புதலுக்காக சில நாள்கள் காத்திருப்பதற்குப் பதிலாக அரவிந்த் கெஜ்ரிவால் ராஜிநாமா செய்திருப்பது துரதிருஷ்டவசமானது” என்று கூறினார்.

பாஜகவைச் சேர்ந்த டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஹர்ஷவர்த்தன் கூறுகையில், “இத்தேர்தலில் எங்களுக்கு போதிய இடங்கள் இல்லாததால் ஏற்கெனவே கூறியிருந்தபடி மறு தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கெஜ்ரிவாலின் ராஜினாமாவை அடுத்து மாற்று அரசு அமைக்க முயற்சிக்கமாட்டோம்” என்றார்.

டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் கூறுகையில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு ஆம் ஆத்மி கட்சி அரங்கேற்றியுள்ள அரசியல் நாடகம்தான் கெஜ்ரிவாலின் ராஜிநாமா” என்று கூறினார்.

Leave a Reply

Top