You are here
Home > Uncategorized > போப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடு: ஓர் ஆண்டு நிறைவடைந்தும் நீதி கிடைக்கவில்லை!

போப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடு: ஓர் ஆண்டு நிறைவடைந்தும் நீதி கிடைக்கவில்லை!

புதுடெல்லி:கடந்த ஆண்டு பீகார் மாநிலம் போப்ஸ்கஞ்சில் ஒரு கர்ப்பிணி முஸ்லிம் பெண்மணி உள்பட நிரபராதிகளான ஐந்து பேரின் மரணத்திற்கு காரணமான போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவுற்ற பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காததை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் டெல்லி பீகார் பவன் நோக்கி கண்டன பேரணியை நடத்தினர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன், என்.சி.ஹெச்.ஆர்.ஓ, அன்ஹத், ஐஸா, என்.ஏ.பி.எம் ஆகிய அமைப்புகளின் தலைமையில் இந்த கண்டனப் பேரணி நடைபெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஆறு மாதத்திற்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என அரசு அறிவித்திருந்த போதிலும் ஒரு வருடம் கழிந்த பிறகும் இதுவரை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

2011 ஜூன் 3-ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்த பலருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தி பீகார் ஆளுநருக்கு அவர்கள் மனு அளித்தனர்.

போப்ஸ்கஞ்ச் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கோரி மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். ஆனால், ஐந்து முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் சாதாரணமானது என்றும், இதற்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு விளக்கம் அளித்தது.

குற்றவாளிகளான போலீசார் மீது தெளிவான ஆதாரங்கள் இருந்த பொழுதும் பீகார் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ, நீதி கிடைக்கவோ எவ்வித முயற்சியையும் பீகார் அரசு எடுக்கவில்லை.

உள்ளூர் பா.ஜ.க தலைவரின் தொழிற்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தி சாலையை மூடியதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பீகாரின் காவிக் கறைப்படிந்த போலீஸ் அதிகாரிகள் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள்.

கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் உடல் மீது போலீஸ் மிதிக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

Top