உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

சிரியாவில் நடைபெற்ற ரசாயன தாக்குதலுக்கு அதிபரே காரணம் – ஐ.நா. சபை!

சிரியாவில் உள்ள கான் ஷைகுன் (Khan Shaykhun) மாகாணத்தில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு அதிபர் பஷார் அல்-அசாத்தின் அரசாங்கமே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு அமைப்பு கூறியிருக்கின்றது.

“தஹ்ரீர் அல் ஷாம்” கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 600-கும் அதிகமான நபர்கள் காயமுற்றனர். உடலில் பட்டவுடன் தீப்பற்றி எரியக்கூடிய மிக்க கொடூரமான நச்சுவாயு கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த இரசாயனத் தாக்குதலால் குழந்தைகள் உட்பட, உயிழந்தவர்கள் மற்றும் காயமுற்றோரைக் சித்தரிக்கும் புகைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்களே வெடித்திருக்கலாம் என்று சிரியாவும் அதன் நட்பு நாடான ரஷ்யாவும் இதுவரை குற்றம் சாட்டி வந்தன. இருப்பினும், அந்தத் தாக்குதலுக்கு சிரியா அரசாங்கமே காரணம் என்ற உலக நாடுகளின் குற்றச்சாட்டை, ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்