தமிழகம் தலைப்புச்செய்தி நோக்கத்தில் சிறந்தது

பேராசை இல்லாத வாழ்க்கை

கடந்த 2007ஆம் ஆண்டில் என் துணைவியார் மீனாவுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்தது. அதேநேரம் எனக்கும் ஜப்பான் நாட்டில் ஒரு வேலை கிடைத்தது.. அங்குச் செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தேன். துணைவியாருக்கு அதில் உடன்பாடில்லை. என்னிடம், “இப்போது நான் வாங்கும் சம்பளம் போதுமா?” எனக் கேட்டார். அவர் கேட்டது எனக்குப் புரியவில்லை. இருப்பினும் பதில் சொன்னேன். “எனக்குப் பேராசை எல்லாம் கிடையாது. வாழ்வதற்கு இது போதும்தான். ஆனால் இதுவரை சம்பாதித்து ஒரு சொந்த வீடு கூட நமக்கில்லையே’

“அதை வீட்டுக்கடன் வாங்கி இனி கட்டிவிடலாம். அதைத் தவிர வாழ்க்கை நடத்த இது போதுமா?” என்று மீண்டும் கேட்டார். அவர் அப்படிக் கேட்டதற்குக் காரணம் இருந்தது. ஏனெனில் நாங்கள் இருவருமே அப்போது வெளிநாட்டில் சம்பாதித்துக் கொண்டிருந்த தொகையோடு ஒப்பிடும் போது இது குறைவான தொகை. நான் சொன்னேன், “நம் இருவருக்குமே பேராசை கிடையாது என்பதால் தாராளமாக இது போதும்”

“அப்படியானால் இனி நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டாம். நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை எப்போதுதான் நீங்கள் வாழ்வது? இனி சமூகத்துக்காக நீங்கள் வாழ நினைத்த வாழ்க்கையை வாழுங்கள். குடும்ப வருமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “இது வருமானம் வரும் பணி அல்ல. ஒரு கூட்டத்துக்குப் போக வேண்டும் என்றால் பேருந்து கட்டணத்துக்குக் கூட நீதான் காசு தர வேண்டும்” என்றேன். பதிலுக்கு அவர் சொன்னார், “அதற்கும் சேர்த்துதான் இந்த வருமானம் போதுமா என்று கேட்டேன்”.

பத்தாண்டுகள் ஓடிவிட்டன. முன்பு நான் சம்பாதித்த காலத்தில் அதை அனுபவித்தவர்கள் இடையில் என்னை ‘பொண்டாட்டி காசில் உட்கார்ந்து சாப்பிடுகிறான்’ என்று பேசியதைக் கேட்டு நான் மனம் நொந்தபோனேன். அப்போது என்னைத் தேற்றி, ‘அப்படி நான் பேசினால் அல்லவா நீங்கள் கவலைப்பட வேண்டும். ஓர் இலட்சியத்தை எட்டும் வரை இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது” என்று தோழராய் அரவணைத்தவர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பர். என்னைப் பொறுத்தவரை என் வெற்றிக்குப் பின்னால் அல்ல முன்னாலேயே என் துணைவிதான் இருக்கிறார். என்னுடைய சில எழுத்தாள நண்பர்கள் தத்தம் துணைவிகளின் ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். முதல் புத்தகத்தை வாங்கிச் சுவற்றில் வீசியடித்த துணைவி, இது சோறு போடுமா என்று கேட்ட துணைவி, புத்தகத்தின் மேல் காரித் துப்பிய துணைவி எனப் பலவிதமான கதைகள். இன்றும் பலர் துணைவியிடம் பொய் சொல்லிவிட்டே கூட்டத்துக்கு வரவேண்டிய நிலைமையை அறிவேன். ஆனால் வீட்டுக்கு திரும்புவது நள்ளிரவானாலும் என் துணைவியார் உட்கார்ந்து கூட்டம் குறித்த அத்தனை செய்திகளையும் கேட்டுவிட்டுதான் உறங்குவார். காடோடி நாவலை, ‘என் உயிர் எழுத்தான மீனாவுக்கு’ என்று சொல்லி இவருக்குச் சமர்ப்பணம் செய்தது முற்றிலும் பொருத்தமே.

இத்தனை பீடிகை எதற்கு எனில் இவர் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகக் கடும் நோயினால் துணைவியார் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அனைத்து கூட்டங்களையும் இரத்துச் செய்துவிட்டு வீட்டில் தங்கிவிட்டேன். வாசிப்பைத் தவிர முகநூல், இதழ் எழுத்துக்கள் எதிலும் மனம் ஈடுபட முடியவில்லை. இடையில் அனிதாவின் மரணம் நிகழ, கடும்நோவுக்கு இடையிலும் அவர் என்னைச் குழுமூர் சென்று வர பணித்தார். இந்த மனசுதான் தற்போது அவர் உடல்நிலையைத் தேற்றித் தந்திருக்கிறது என நம்புகிறேன்.

முழுமையாகக் குணம் பெறவில்லை எனினும் இவ்வளவு நீண்ட நாட்கள் இதுவரை விடுமுறை எடுத்தது கிடையாது பள்ளிக் குழந்தைகளின் படிப்பு பாதித்துவிடும் என்று பணிக்குச் சென்று விட்டார். அவர் ஓர் நல்ல ஆசிரியரும் கூட என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதமுண்டு. அதுவும் குழந்தைகள் விரும்பும் ஆசிரியர். என்னையும் மீண்டும் பொது வாழ்வுக்கு திரும்ப பணித்துள்ளார். அவரின் இனிய உள்ளத்தை என் குடும்பத்தோடு நெருங்கிப் பழகிய தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

அத்தனை தோழமைகளின் அன்பும் அவரது உடல் நலத்தை முழுமையாக மீட்கட்டும்.

 

கடந்த 2007ஆம் ஆண்டில் என் துணைவியார் மீனாவுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்தது. அதேநேரம் எனக்கும் ஜப்பான் நாட்டில் ஒரு வேலை…

Posted by நக்கீரன் நக்கீரன் on Monday, October 9, 2017


2 comments on “பேராசை இல்லாத வாழ்க்கை
  1. That іs such a fun gаme and we had an ideal Ƅirthdɑy Daddy.?
    Larry ɑdded. ?Can we play ?What?s the veey best factor about God?
    tօmorгow tօo?? he bеgged his Mommy.

Comments are closed.