செய்திகள் தமிழகம் தலைப்புச்செய்தி

தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநாட்டில் தீர்மானம்

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உரிமை முழக்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் உரிமை முழக்க மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.முகம்மது இஸ்மாயில் தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர்  எம்.முகம்மது சேக் அன்சாரி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் அரசியல் சாசன உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு தனது தோல்விகளை திசை திருப்ப சிறுபான்மை முஸ்லிம்களின் இயக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளின் பெயரால் குறிவைக்கிறது.

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து, குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகளை வழக்குகளில் இருந்து விடுவிப்பதில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மும்முரமாக உள்ளது. அந்த வழக்குகளில் அப்பாவி இளைஞர்களை சிக்க வைக்கும் வேலையில் என்ஐஏ ஈடுபடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் என்ஐஏ எந்த வழக்கையும் விசாரிக்கலாம் என்பது மாநில அரசுகளின் உரிமையை கேள்விக் குறியாக்குவதுடன், மாநில சுயாட்சிக்கும் எதிராகவும் உள்ளது. எனவே, தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும்.

மதுரை போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முகம்மது அலி ஜின்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை வலுவாக எதிர்த்து வரும் பாப்புலர் பிரண்ட் அமைப்பை, லவ் ஜிகாத் தீவிரவாத தொடர்பு என்று போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தடை செய்ய பாஜக அரசு மும்முரமாக உள்ளது’ என்றார்.

இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.அபுபக்கர், தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.இஸ்மாயில்,கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது ஷாகிப்,SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாக்கவி,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் SM.பாக்கர்,வெல்ஃபேர் பார்ட்டி தலைவர் S.N.சிக்கந்தர்,மனித நேயஜன நாயக் கட்சி பொருளாளர் ஹாரூன் ரஷீத்,தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் உரையாற்றினார்.