இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

கௌரி லங்கேஷ்  படுகொலை வழக்கில் கொலையாளி யார் என்று தெரியும் – கர்நாடக உள்துறை அமைச்சர் பேச்சு!

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகோலை வழக்கு விசாரணையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 5 அன்று படுகொலை செய்யபட்ட கர்நாடக பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் வழக்கு ஒரு மாதத்தை எட்டிய நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இது குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கௌரி அவர்களை படுகொலை செய்த நபர் யார் என்றும் எவ்வாறு படுகொலை நடைபெற்றது என்றும் தங்களுக்கு தெரிய வந்துள்ளது என்று கூறினார். மேலும் இதற்கு முன்பு நடைபெற்ற கல்புர்கி படுகொலை வழக்கில் தங்களுக்கு எந்தவொரு ஆதாரமோ தடயமோ கிடைக்காமல் போனதால் அந்த வழக்கு விசராணை தாமதமாக நடைபெற்றது ஆனால் கௌரி படுகொலை வழக்கில் கொலையாளி கொலை செய்த இடத்தில் பல ஆதாரங்களை விட்டு சென்றுள்ளான். இதனால் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு விசாரணையில் பல முன்னேற்றத்தை ஏற்படுத்த இது உதவியாக இருந்தது. அதேபோல் அது என்ன ஆதாரம்?, யார் அந்த குற்றவாளி? என்பதை தற்போது ஊடகங்களிலோ பொதுவெளியிலோ கூற முடியாது.
இதனால் கொலையாளி ஆதாரங்களை அழிக்கவோ அல்லது தப்பிக்கவோ கூடும். மேலும் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்போது அது வலுவான ஆதாரமாக இருக்க வேண்டும். ஆகையால் கிடைத்த ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக சோதனை செய்து வருகிறது. விரைவில் கொலையாளி கைது செய்யபடுவான் என்று கூறினார்.
நாளை (அக்டோபர் 5) புது டெல்லியில் கௌரி லங்கேஷ்க்கு நீதி கிடைத்திட வேண்டும் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற இருக்கும் நேரத்தில் ரெட்டியின் இந்த தகவல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்தும் பேசிய ரெட்டி நடைபெற இருக்கும் பேரணியை மனதில் வைத்து தான் இந்த தகவலை வெளியிடவில்லை என்று கூறினார்.