இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

ஹாதியா வழக்கில் புதிய திருப்பம்

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்த ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை இன்று தெரிவித்துள்ளது.இஸ்லாத்தை தழுவிய ஹாதியாவின் திருமணம் ரத்துச் செய்யப்பட்டு, அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அணுப்பிவைக்கப்பட்ட கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு குறித்து கேள்வி எழுப்பியும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் பெயரால் ஹாதியா வெளியுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வீட்டுச் சிறையில் கடுமையான மனித உரிமை மீறல்களை சந்திப்பதாக குறிப்பிட்டு ஷஃபின் ஜஹான் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று(திங்கள் கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஷஃபின் ஜஹான் சார்பாக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். அப்போது வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துக்களை தெரிவித்தார்..

– 24 வயதான ஹாதியாவுக்கு சுயமாக தீர்மானம் எடுக்கும் உரிமை உண்டு
– தந்தை மட்டுமே பாதுகாவலர் என்று கூற முடியாது
– தேவைப்பட்டால் ஹாதியாவின் கருத்தை கேட்ட பிறகு புதிய பாதுகாவலரை உச்சநீதிமன்றம் நியமிக்கும்
– சட்ட விதி 226இன் படி ஹேபியஸ் கார்பஸ் மனுவில் ஹாதியாவின் திருமணத்தை ரத்துச் செய்த உயர்நீதிமன்ற உத்தரவு சரியா? என்பதை உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும்
– ஹாதியா வழக்கில் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்தும் பரிசோதிக்கும்
மேலும் இவ்வழக்கின் விசாரணை வருகிற திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.