தலைப்புச்செய்தி நோக்கத்தில் சிறந்தது

பெண்ணியமும் பெண்ணியம் நிமித்தமும்!

கடந்த ஒரு வார காலமாக, ஃபேஸ்பும் எங்கும் பெண்ணிய விளக்கம் படாதபாடு படுகின்றது. Lipstick Under Burkha படத்திலும் அப்படத்தின் இயக்குநர் Alankrita பெண்களின் பாலியல் உரிமைகளை மட்டுமே அவர்களின் கனவுகளாகச் சித்திரித்து அவர்களின் போராட்டங்களைக் கதைகளாக்கியுள்ளார். எனக்கென்னவோ பெண்ணியம் இங்கு தொடங்கிவிடவும் இல்லை, இங்கேயே முடிந்துவிடவும் இல்லை.

பாயிண்ட் நம்பர் 1:

பெண்களின் பாலியல் விடயங்களை மட்டுமே அவர்களின் கனவுகளாகச் சித்திரித்து இன்னும் எத்தனை வருடத்திற்கு பெண்ணியத்தை ஓட்டுவோம். அதைத்தாண்டிய, பெண்களின் அறிவுத்திறன் மற்றும் படைப்பாற்றல் உரிமைகளுக்கான சவால்கள் ஒரு பொருட்டாகக் கூடக் கருதப்பட்டதில்லை. நான் அறிந்தவரை அம்மாதிரியான கதாபாத்திரங்கள் எந்தப்படத்திலும் முன்வைக்கப்பட்டது கூட இல்லை. அப்படியான ஆளுமையான பெண் என்றால் உடனே பாலியல் திறவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டவளாக இருந்துவிட வேண்டும் என்பது தான் பெரும்பான்மை அபிப்ராயம்.

பாயிண்ட் நம்பர் 2:

Lipstick Under Burkha / இசுலாமியப் பெண்களின் பிரச்சனைகளை நாம் விமர்சனப்பூர்வமாக முன் வைக்கும்போது, மீண்டும் மீண்டும் அவர்கள் மனத்தில் இந்துமதப்பெண்களின் பூட்டுகளையே கொண்டு மாட்டுகிறோம். திரை அணிந்திருந்தாலும் வாழ்வியல் ரீதியாக, இசுலாமியப் பெண்கள் நிலை அவர்கள் பக்கமிருந்தே பார்க்கப்பட்டு அவர்களே முன்வைப்பதாக இருக்கவேண்டும். இதற்கெல்லாம் இந்தத் திருநாட்டில் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப்படத்தை வெளியிடுவதற்கே Alankrita படாதபாடு பட்டிருக்கிறார்.

பாயிண்ட் நம்பர் 3:

இன்னும் பெண்ணிய விடயத்தில் இந்தியப்பெண்ணியவாதிகளே கத்துக்குட்டிகள் தாம். இதுவரை, உணர்வு ரீதியாக நம் சுயமரியாதையைக் காயப்படுத்தும் விடயங்களை சமூகத்தின் முன்வைத்து போராடுவதற்கான பயிற்சியை மட்டுமே நாம் பெற்றிருக்கிறோம். பெண்ணியம் என்பது யானையைத் தடவிக் கருத்து சொல்லும் பார்வையற்றோரின் நிலை. இந்திய ஆண்களின் நிலையோ இந்த சப்ஜெக்ட்டைப் பொறுத்தவரை ஒண்ணாம் வகுப்பு கூட தேறியது இல்லை.

பாயிண்ட் நம்பர் 4:

இன்னும் தரமணி பார்க்கவில்லை. ஒரு படத்தை விமர்சனப்படுத்துவதில் நாம் பண்புகளையும், எல்லைகளையும், அறங்களையும் மீறிச் செல்கிறோம் என்பதே என் நிலைப்பாடு. ஓர் இயக்குநர் தரமான படைப்பை முன்வைக்கவில்லை என்று அவருக்கு உணர்த்துவது தாம் நம் நோக்கமெனில், அவர் தன் பார்வையை மாற்றிக்கொள்ளச் செய்வதே நம் நோக்கம் எனில் இதுவரை அப்படியான ஒரு பார்வையுடைய பதிவை யாரும் முன்வைக்கவில்லை. பெரும்பாலான விமர்சனங்களை வாசித்துவிட்டேன்.

பாயிண்ட் நம்பர் 5:

ஆண்கள் பார்க்கும் பெண்களின் உலகம், கண்டிப்பாய்ப் பெண்கள் முன்வைக்கும் பெண்களின் உலகமாய் இருக்கமுடியாது. அதுவும், பெண்கள் குறித்து எந்தப் பாலபடமும் இல்லாத நம் சமூகத்தின் ஆண்கள் கண்டுணரும் பெண் உடல், வாழ்வு, உணவு எல்லாம் செவ்வாய் கிரகத்தின் மனிதப்பண்புகளுக்கு நிகரானது; அது, ஒரு துன்பவியல் காவியத்திற்குச் சமானம். அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவே நடுக்கமாய் இருக்கிறது.

பாயிண்ட் நம்பர் 6:

பெண் – ஆண் உறவின் நெருக்கத்தையும் சமூகப்பங்கையும் அழகாய் மீட்டுத்தரும் இடத்தில், ஒரே கயிற்றில் நடக்கும் சாகசத்தை இருவரும் ஏற்கவேண்டிய இடத்தில் என்றால் தான் பெண்ணியம் என்பதை எவர் சொன்னாலும் நாம் ஏற்கமுடியும்.

இப்பொழுது இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

 

பெண்ணியமும் பெண்ணியம் நிமித்தமும்கடந்த ஒரு வார காலமாக, ஃபேஸ்பும் எங்கும் பெண்ணிய விளக்கம் படாதபாடு படுகின்றது….

Posted by Kutti Revathi on Friday, August 18, 2017

 

.