இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி தொடர்கள்

1984 புத்தகமும் 2017 இந்தியாவும்!!-அனீஸா யூனுஸ்

பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. இன்றோ நாளையோ மக்களின் வாழ்வை இண்டு இணுக்காக அரசு கண் காணிக்கப் போகிறது. அதனை மக்கள் அணுக்கமாக எதிர்கொள்ளவும், அத்தகைய ‘பாதுகாப்புக் காரணங்களை’ ஏற்றுக்கொள்ளவும், உடன்படவும் மனதளவில் தயாராகிக் கொள்வதற்காகவே அந்த ஒளிபரப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்பதே எண்ணமாக இருந்தது. மக்களை மனதளவில் தயார் செய்துவிட்டால் போதும் எத்தகைய கொடுமையையும் அரங்கேற்றிக் கொள்ளலாம். பண மதிப்பிழப்பிலிருந்து ரேசன் கார்டு வரை எல்லாமே சின்னச் சின்ன அடிகளாய் எடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். எத்தனை வலித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு நகரும் நம்மை இன்னும் தனக்கேற்றபடி மெருகூட்டும் அரசினைப் பற்றிய ஒரு புனைப் பதிவுதான் ‘1984’.

1984இல் ஓஷியேனியா என்னும் ஒரு நாட்டில் நடைபெறும் தினசரி வாழ்வுதான் கதையின் கரு. தன் மக்களின் வரவேற்பறை முதல் படுக்கையறை வரை, அந்தரங்கம் என எதையுமே விடாமல் கண்காணிக்கும் அரசு. (இங்கே ப்ரைவசி என்ற ஒன்று இருக்கிறதா எனக் கேட்ட நீதிபதி தங்களின் நினைவுக்கு வரலாம்.) சொல், செயல் மட்டுமல்ல, சிந்தனைகளில் கூட அரசின் கொள்கைக்கு மாற்றமாக, அரசிற்கு மாற்றமாக எதையும் சிந்திப்பதே கூட கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் ஆட்சி. சிந்தனைகளை முக பாவங்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம் எனும்போது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், வாகனங்களிலும், கழிப்பிடங்களிலும், பொது வீதிகளிலும் என அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் ‘டெலிஸ்கிரீன்கள்’, ஒவ்வொருவரைப் பற்றிய தகவலையும் உடனுக்குடன் அரசிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. ரகசியமாய், பரம ரகசியமாய்க் கூட எவரிடத்திலும் பேச முடியாதபடி தத்தம் மனைவி குழந்தைகளையே நம்ப முடியாத அளவிற்கு ‘சிந்தனைப் போலீசும்’, ஒற்றர் படையும். ஒரு புன்முறுவல் அல்லது ஒரு கோணிய புருவம் தங்களைக் காட்டிக்கொடுத்து விடப் போதுமானது. இப்படியான ஒரு அரசின் கீழ், அரசிடம் பணி புரிந்து கொண்டே அரசை வெறுக்கும், அதன் கொள்கைகளை வெறுக்கும் ஒருவனின் வாழ்வைப் பற்றிய குறுங்கதைதான் ‘1984’. அவனுக்கு என்ன் நேர்ந்தது, என்ன செய்தான், யார் அவருக்கு உதவினார், யார் அவரைக் காட்டிக்கொடுத்தார், முடிவில் அவன் என்ன ஆனான் என்பதுதான் 240 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பீஹாரில் பிறந்த இந்தியரான ஜார்ஜ் ஆர்வெலின் மிகப் புகழ் வாய்ந்த ஒரு புதினம் இது.

‘1984’ஐ இப்போது அதிகம் வாசிப்பது அமெரிக்க மக்கள்தான் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. முன்பெப்போதையும் விட இப்போது அதிகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனையாகின்றதாம். இந்தியாவிலும் இனி மீண்டும் விற்பனை சூடு பிடிக்கலாம். பல விதங்களில் ஒஷியேனியா அரசை மோடி அரசு நினைவூட்டுகின்றது. உதாரணத்திற்கு // ஒன்பதாவது மூன்று வருடத்திட்டம் உரிய காலத்திற்குள்ளாகவே நிறைவேறிவிட்டது// என திரும்பத் திரும்ப அலசும் டெலிஸ்க்ரீனைப் போலத்தான் நம் வீட்டு டெலிவிஷன்களும் மோடியின் ஸ்வச் பாரத் திட்டம் வெற்றியடைந்து விட்டதாகவும், கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், உற்பத்தியில் இந்தியா எல்லா நாடுகளையும் விட முன்னேற்றமடைந்து விட்டதாகவும் திரும்பத் திரும்ப அலறிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் உண்மை நிலை என்ன என தெரியாவிட்டாலும், இவையெல்லாம் அண்டப்புளுகு எனத் தெரிந்தாலும் நம்மில் யாரும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ, அரசின் மக்கள் தொடர்புத் துறைக்கோ கடிதமெழுதி விளக்கம் கேட்கப் போவதில்லை. பொது நல வழக்குப் போட்டு, இது போன்ற பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பக்கூடாது என்று தடை வாங்கக்கூட நம்மில் யாரும் தயாரும் இல்லை. அப்படியொரு வழக்கு நீதிமன்றத்தில் தகுந்த நீதி பெற்றுத்தரும் என்பதற்கான எந்த வித உத்திரவாதமும் இல்லை.

இரும்பு முள்வேலிகள், இயந்திரத் துப்பாக்கிகள், குரங்கு முகம் கொண்ட போர் வீரர்கள், என எல்லாமும், ஆள் அரவமில்லாத தெருக்களும், இருவர் சேர்ந்து நின்று இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேசினாலும், இருவரையும் அள்ளிக்கொண்டு போகும் காவல் வாகனங்கள், ‘அன்பு மந்திரிசபை’ இவையெல்லாம் காஷ்மீரத்தில் இந்தியாவின் இரும்புக்கை ஆட்சியை நினைவில் கொண்டு வரக்கூடும். ஈவு இரக்கமின்றி அரசியல் எதிரிகளை களையெடுப்பதும், சாமானியர்களை தாங்களே குண்டு வீசி அழிப்பதும் காஷ்மீரை மட்டுமல்ல, கதிராமங்கலத்தையும், கூடங்குளத்தையும்தான் கண் முன் கொணர்கின்றன.

ஓஷியேனியாவின் டெலிஸ்கிரீன்களின், ‘வெறுப்புப் பிரசங்க’த்திற்கு நிகராக நம் இந்திய தொலைக்காட்சி சேனல்களால் மட்டும்தான் நிற்க இயலும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை தாக்கியோ, மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களையோ, சமுகக்கட்டமைப்பில் அடித்தளத்தில் உள்ளவர்களைப் பற்றியோ எப்படியான ஒரு அபிப்பிராயத்தை மக்கள் மனத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு ஒலி/ஒளி பரப்புவதில் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே. இஸ்லாமியன் ஒரு குற்றம் புரிந்தான் என செய்தித்தாளில் வந்து விட்டால் உடனே அர்ஜூனின் படம் ஒளிபரப்பாவதும், அர்ஜூன் சம்பத் வந்து அதற்கு விளக்கம் கொடுப்பதும், பிற்படுத்தப்பட்டவர்கள் கல்விச்சாலைகளில் சாதிக்கிறார்கள் என்றதும் தேவர்மகன் விளம்பரப்படுத்தப்படுவதும், ஆறு வித்தியாசங்களில் ஒன்று கூட இன்றி அப்படியே புனைவில் உள்ளதுதான் நிஜத்தினில் நடந்து கொண்டுள்ளது. நாவலில் தினமும் இரண்டு நிமிடங்கள், மாதத்தில் இரு நாட்கள் என வகுத்திருந்தாலும், இந்திய தினசரிகளிலும், அலைவரிசைகளிலும் நேரங்காலமின்றி மக்களின் மனதில் வெறியூட்டப் பயன்படுகிறது. புனைவிலாவது ஒரு கோல்ட்ஸ்டீன்தான். இங்கேயோ தாடி வைத்த எல்லாருமே தேசத் துரோகிகளாக, மாட்டை சாப்பிடும் எல்லாருமே மனிதமற்றவர்களாக, புராணங்களை, இதிகாசங்களை கேள்வி கேட்கும் பேராசிரியர்களெல்லாரும் கொல்லப்பட வேண்டியவர்களாக அல்லவா காட்சிப்படுத்தப்படுகின்றனர்??? ‘பிக் பாஸ் உங்களைக் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்’ என்பது எத்தனை அழுத்தமாக இங்கே பொருந்துகிறது. உங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில் இருப்பது மாட்டிறைச்சியா, ஆட்டிறைச்சியா என்பது வரை அரசாங்கத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் போய்ச் சேர்கிறது.

இதெல்லாம் தற்செயல்தான் என நினைப்பவர்களிடம் கேட்க நினைப்பது. ஆர்.எஸ்.எஸின் ஷாகா கேம்புகளைப் போலவே, வித்யாலயாக்களில் பயிற்றுவிக்கப்படும் தற்காப்புக் (????) கலைகளைப் போலவே இங்கும் அரசாங்கம் குழந்தைகளுக்கு ஒற்று வேலை செய்வதைப் பற்றியும், பொய்யான போர் ஆயுதங்களுடன் பயிற்சி அளிக்கப்பதைப் பற்றியும் 1949இலேயே எழுதப்பட்டிருப்பதைப் பற்றி என்ன சொல்வது???

-அனீஸா யூனுஸ்

தொடரும்…