தமிழகம் தலைப்புச்செய்தி

ஜனாதிபதி தேர்தலில் பாஜக.விற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு – சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து  சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பதில்லை என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டித்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்ட அறிக்கையில்,

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாத இறுதியில் நிறைவடையவுள்ளது. இதையொட்டி ஜூலை மாதம் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆதரவு கோரினார். இதனிடையே மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு கேட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்தக்கூட்டத்திற்கு பின்னர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க.வை துண்டாடும் பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளித்திருப்பதை அதிமுக.வினரே ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். இந்த ஆதரவு அதிமுக.வை மேலும் பலவீனப்படுத்த பா.ஜ.க.வை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. பா.ஜ.க.விற்கு துணை போவதால் ஜனநாயக சக்திகள், மதசார்பற்ற சக்திகள், சிறுபான்மை மக்களின் ஆதரவை அதிமுக இழக்க நேரிடும். அதிமுகவின் இந்த முடிவானது ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திடும்.

மேலும் எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்காத நிலையிலும், பாஜக இன்னும் வேட்புமனுவே தாக்கல் செய்யாத நிலையிலும், இவ்வளவு அவசரமாக பா.ஜ.க.விற்கு ஆதரவு தரவேண்டிய அவசியம் என்ன? இந்நிலையில் புரட்சி தலைவி அம்மா அணியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை அவசர அவசரமாக பாரதீய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை அவர் சொல்கிற போது தலித் சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை பாரதீய ஜனதா அறிவித்துள்ளதாலேயே தாங்கள் ஆதரித்துள்ளோம் என்றார். அப்படியென்றால் ஏதிர்கட்சிகள் தங்களின் தரப்பில் ஒரு தலித் வேட்பாளரை பரிசீலித்து கொண்டிருக்கும் போது அவசர அவசரமாக பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ன் கூற்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூற்றும் நகைப்பிற்குரிய ஒன்றாகவே தெரிகிறது. ஒபிஎஸ் அவர்களும் இபிஎஸ் அவர்களும் பாஜக வேட்பாளரை போட்டி போட்டுக் கொண்டு எந்த பிண்ணனியையும் ஆய்வு செய்யாமல் எதிர்கட்சிகளுடைய வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே தங்களது ஆதரவை தெரிவிப்பது ஏன் என்று நிச்சியம் மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.

நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை சமூக மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அறிவித்துவிட்டு,  இஸ்லாமியர்களும், கிருஸ்துவர்களும் இந்தியர்கள் இல்லை என்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்றும் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்க்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளித்ததன் மூலம் சிறுபான்மை மக்களை முதல்வர் ஏமாற்றியுள்ளார் என்பதையே காண முடிகிறது.

முதல்வரின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டலுக்கு எதிரான நடவடிக்கையாகும். எனவே, அதிமுகவின்அனைத்து எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சி பிரகாரம் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதையும்,அதிமுக தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் பாஜக.வின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.


One comments on “ஜனாதிபதி தேர்தலில் பாஜக.விற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு – சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்.

Comments are closed.