உலகம் செய்திகள் தமிழகம் தலைப்புச்செய்தி

“தமிழ்நாடு கலாச்சார பேரவை” நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அமீரகவாழ் தமிழ் மக்களிடையே பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் “தமிழ்நாடு கலாச்சார பேரவை” சார்பாக வருடந்தோறும் இஃப்தார் – நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருட இஃப்தார் நிகழ்ச்சி ரமழான் பிறை 21, வெள்ளிக்கிழமை அன்று, துபை கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது சியாத் அவர்களின் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, சிறப்புப் பேச்சாளர் சகோதரர் வலசை ஃபைஸல் அவர்கள் “பத்ருப்போர்” என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார். முஸ்லிம்களின் ஜீவ மரணப்போரான பத்ருப்போர் நிகழ்வுற காரணமாயிருந்த சம்பவங்கள் தொடங்கி, அது தொடர்பான அனைத்து வரலாற்றுச் சம்பவங்களையும் தனது பேச்சாற்றலின் வாயிலாக அனைவரின் மனதிலும் உணரச் செய்தார். மேலும், “ரமழான் காலத்தில் நடைபெற்ற பத்ருப்போரானது வெறுமனே வரலாற்றுச் சம்பவமல்ல; இறை விசுவாசிகள் அநீதிக்குள்ளாக்கப்படும் போது, எதிரணியினர் ஆட்சியதிகாரம், படைபலம், பொருளாதாரம் என அனைத்திலும் பல மடங்கு உயர்ந்திருந்த போதிலும், நீதியை நிலைநாட்ட வேண்டி போராட எழும்போது அல்லாஹ் வெற்றியை வாக்களிக்கிறான்; இந்திய முஸ்லிம்கள் தங்களது நிகழ்கால சூழ்நிலையையும், பத்ரு சம்பவங்களையும் பொருத்திப்பார்த்து செயலாற்ற வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், அமீரக தொழிலதிபர்களும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் திரளாக கலந்து கொண்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து சந்தோஷமாக அளவளாவிக்கொண்டனர். தமிழ்நாடு கலாச்சார பேரவையின் இந்த இஃப்தார் நிகழ்வானது, இறையச்சம் மேலிடும் புனித ரமழானில் வலிமையான சகோதரத்துவத்தை பேணுவதாகவும், சமூக பாதுகாப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தமை மகிழ்ச்சிக்குரியது.