இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் பலி! ம.பி. முதல்வர் பதவி விலக எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பு ஏற்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் லட்சம் துணை ராணுவப் படையினரை நிறுத்தி, மத்திய பிரதேசம் போலீஸ் ராஜ்யமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சையத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய பிரதேச மாநில மாண்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சனையை முதலமைச்சர் சவுகான் தவறாக கையாண்டதன் காரணமாக 6 உயிர்கள் பலியாகியுள்ளன. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்து அவர்களை கைது செய்வதோடு, மத்திய பிரதேஷ் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். துப்பாக்கி சூடு காரணமாக விவசாயிகள் கடுமையான கிளர்ச்சியில் ஈடுபட்டு பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபட்டதால் ரூ.400 கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய பிரதேஷ் அரசின் விவசாய நலத்திட்டங்களால் ‘கிரிஷ் கர்மான்’ தேசிய விருதை ஆறுமுறை பெற்றுள்ளதாக முதல்வர் சிவ்ராஜ்சிங் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அதேநேரத்தில், விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் குமுறுவதையும், கமிஷன் மண்டிகளால் ஏற்படும் இழப்பீடுகளையும் முதல்வர் கருத்தில் கொள்வதே இல்லை. விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத பிரச்சனை, விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்யாத பிரச்சனை ஆகியவற்றால் விவசாயிகள் கோபம் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிலோ வெங்காயம் ரூ.1 அல்லது 2க்கு விலை போவதால், வெங்காயத்தை விவசாயிகள் சாலைகளில் கொட்டினார்கள். குறிப்பாக கடந்த ஆண்டில் மால்வா பகுதியில் இது நடந்தது. இந்த ஆண்டு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை கிடைக்கிற விலைக்கு விற்று கடும் நஷ்டத்தை சந்தித்தார்கள்.

கடந்த 2014-15 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் விவசாயத்துறை  20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அரசால் கூறப்பட்டாலும், விவசாயிகளின் தற்கொலை அவலம் நீடிக்கிறது. 2016 பிப்ரவரியிலிருந்து 2017 பிப்ரவரி வரை 1982 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு விளைச்சல் இன்மை, போதிய விலையின்மை, கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை, நிலப்பிரச்சனை மற்றும் வறுமை ஆகியவையே காரணம் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

உத்தரபிரதேசத்தில், விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து பாஜக தலைவர்கள் வெற்றிபெற்றனர். வறட்சி காரணமாக பல்வேறு மாநில விவசாயிகளும் விவசாயக் கடன் தள்ளுபடி கோரிய நிலையில், உ.பி.யில் மட்டும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. உ.பி.யைப் போன்று தங்களுக்கும் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற மத்திய பிரதேச மாநில விவசாயிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பு அவர்களை வன்முறையில் ஈடுபட வைத்துள்ளது. பாஜக அரசின் இந்த தவறான  முன்னுதாரணம் வருங்காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசானது மாவட்ட அளவிலும், இடைத்தரகர்களை ஒழித்து விவசாய சந்தைகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.