உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

அன்னமிடும் விவசாயிகளைக் காப்போம்! அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்கு “மொய் விருந்து” அழைப்பு!

அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களால், கிராமியத் திருவிழா எனும் ”மொய்விருந்து” வரும் மே 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளனர், இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இது குறித்து நியூஜெர்சியில் வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ”

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்தால் குறு நில விவசாயி இயற்கையுடனும், படைத்த இறைவனிடமும், ஆளும் அரசாங்கத்திடமும், மன்றாடி போராடி மாய்ந்து கொண்டிருக்கிறான். வறட்சியினால் விவசாயக் குடும்பங்கள் பஞ்சத்தில் வாடுகின்றன. நீர் வளத்தில் செழித்த வேளாண்மை நிலங்கள் அனைத்தும் நீரில்லாமையாலும், அயல் நாட்டு விதைகளின் இறக்குமதியாலும், போதுமான உரங்களும், சத்துகளும் இல்லாததாலும், தரிசு நிலமாக மாற, விவசாயிகளின் தற்கொலைகளும், மாரடைப்பு, ரத்த அழுத்த இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

மேலும், கடன் வாங்கி விதை விதைத்த விவசாயிகள், போட்ட விதை முளைக்காமல் மனம் உடைகின்றனர். வாங்கிய கடனைக் கட்ட வழியின்றி திணறுகின்றனர். பெரும்பாலும் மழையில்லாமல் தவிக்கின்றனர். என்றாவது மழை பெய்தாலும், அந்த நீரை சேகரிக்க வழியின்றி வலியுறுகின்றனர். ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் வற்றிப் போக, முளைத்த பயிர் வறட்சியினால் கருகிப் போக, உயிர் உடைந்து வாழ வழியின்றி இறக்கின்றனர். பல நாட்கள் நிலத்தை வேர்வை சிந்தி உழுது, பயிர் செய்து பராமரிப்பவரின், பிள்ளைகள் பட்டினியில் வாடுகின்றனர். பள்ளி செல்ல வழியின்றி சிதைகின்றனர். எத்தனையோ விவசாயக் குடும்பங்கள் தலைவனை இழந்து துடிக்கின்றனர்.

ஆளும் அரசாங்கமோ குறுநில விவசாயிகள் வேளாண்மைக்கு வாங்கிய வங்கிக் கடன்களை மன்னிக்க மறுக்கிறது. தனியாரிடம் வாங்கிய கடன் தொல்லைகளால் விவசாயக் குடும்பங்கள் நலிந்து போகின்றன. நமக்கு அன்னமிட்டு வளர்த்த பூமியில் நம் விவசாயிகள், அழிவதை கண்டும் காணாதது போல, நாம் மட்டும் வயிறு முட்ட உண்டு, மகிழ்ந்து, நிம்மதியாக உறங்க இயலுமா? இயலவே இயலாது. ஏதோ நம்மால் முடிந்த சிறு உதவிகளை நாம் நம் தாய் மண்ணுக்கு செய்வது நம் அனைவரின் தலையாயக் கடமை அல்லவா?

“ஒன்று கூடினால் உண்டு வாழ்வு” வாருங்கள் ஒன்று கூடுவோம் நமக்கு அன்னமிடும் விவசாயிகளைக் காப்போம் நம் தமிழ் மண்ணில் விவசாயத்தை மீட்போம் இவ்வாறு அந்த அறிக்கையின் மூலம் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இக் கிராமியத் திருவிழா எனும் மொய்விருந்து மே 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணிக்கு வெஸ்ட் விண்ட்சர் அருகில் 31 Allens Road ல் நடைபெற உள்ளது.