உலகம் செய்திகள் தலைப்புச்செய்தி

ரமலான் மாத உம்ரா பயணிகளுக்காக ஜித்தாவில் இரத்ததான முகாம்!

பிற மாதங்களை விட ரமலான் மாதத்தில் உம்ரா செய்தால் பல மடங்கு நன்மை கிடைக்கும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அதனால் உலகம் முழுவதிலுமிருந்து ரமலான் மாதத்தில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவுக்கு வருவது வழக்கம்.

அவர்களில் இரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக தமிழக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எற்பாட்டில் நேற்று  ஜித்தாவில் கிங் ஃபஹத், கிங் அப்துல் அஸீஸ் ஆகிய மருத்துவமனைகளில் இரத்ததான முகாம்கள் நடைபெற்றது.

இதில் கிங் ஃபஹத் மருத்துவமனையில் நடந்த முகாமில் 67யூனிட்டும், கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 106யூனிட்டும் இரத்தம் கொடையாக பெறப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா கூறும் போது,

இந்திய சுதந்திரதினம், இந்திய குடியரசுதினம் போன்ற நாட்களில் இது போன்ற முகாம்களை நடத்துவதுடன் உலகெங்கிலும் இருந்து மக்காவுக்கு வருகை தரும் புனித பயணிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை நேரங்களில் இரத்தம் தேவைப்படுவோருக்காக முன்னேற்பாடாக வருடந்தோறும் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்த முகாம்களில் வழங்கப்பட்ட இரத்தம் இந்த வருடம் ரமலான் மாதத்தில் உம்ரா செய்ய சவுதி வருபவர்களில் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக அனுபபப்படும் என்றார்.

மருத்துவமனையின் பரிசோதனை மைய இயக்குநர் டாக்டர் லுபானா அல் முனவி மற்றும் இரத்தவங்கி இயக்குநர் டாக்டர் அய்மன் அல் சபரி ஆகியோர் இது போன்ற முகாம்கள் மக்களிடத்தில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹமது முனாப் கூறும் போது,

இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி எந்நேரத்தில் தேவைப்பட்டாலும் அவசர இரத்ததானம் செய்து வருகின்றோம். ‘பிறருக்கு இடர் தரும் வகையில் தரையில் கிடக்கும் ஒரு முள்ளை அல்லது கல்லை எடுத்து அப்புறப்படுத்துவது கூட இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும்’ என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதால் இதுபோன்ற மனிதநேயப் பணிகளை நாங்கள் செய்து வருகின்றோம். இந்த முகாம் ஜித்தா மண்டலம் நடத்தும் 14 வது முகாமாகும்“ என்று குறிப்பிட்டார்.

இம்முகாமில் சவுதி பெண்கள் உட்பட  பெரும்பான்மையான தமிழர்கள் கலந்து கொண்டனர்.