இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

”ஸ்வச் பாரத்” திட்டத்தின் பெயரால் மோசடி!

முன்னதாக 100 சதவிகிதம் கழிவறைகள் கொண்ட பகுதியாக, பெந்தரா பகுதி கடந்த நவம்பர் 2016-ல் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் அருகேயுள்ள அமர்பூர் கிராமத்தில் வசிக்கும் 75 வயதான தாயும் அவரது மகளும், தங்களது கழிவறையைக் காணவில்லை என தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பெலா பட்டேல் என்கிற அந்த மூதாட்டி, தன் வீட்டில் கழிவறை இல்லை என்பதால் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் கட்டித் தரவேண்டி கிராம பஞ்சாயத்துக்கு மனு செய்திருக்கிறார். ஆனால், ஏற்கெனவே பஞ்சாயத்து சார்பில் கழிவறை கட்டிக் கொடுத்துள்ளதாகப் பதில் வந்துள்ளது. இந்தப் பதிலைக் கண்டு ஆச்சர்யமடைந்த பாட்டிக்கு பின்னர்தான் தன் பெயரை வைத்து அதிகாரிகள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. பஞ்சாயத்து சபை கூறியதைத் தொடர்ந்து கழிவறையைக் காணவில்லை என அம்மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அப்பகுதிவாசி ஒருவர் கூறுகையில்,

இப்படி தவறான ஆவணங்களை உருவாக்கி, மக்களின் பணத்தை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருடுவது தெரிந்தாலும், யாருமே இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. இந்த பாட்டிதான் முதல் முதலாக குரல் கொடுத்துள்ளார் என்றார்.

அமர்பூர் காவல் நிலைய அதிகாரி நிக்கோலஸ் இது குறித்து தெரிவிக்கையில்,

பெலா பட்டேலும் அவரது மகள் சந்திரா பட்டேலும் முறைப்படி தங்கள் வீட்டில் கழிவறைக் கட்டியுள்ளதாகக் கூறும் அரசு ஆவணங்களின் நகல்களோடு தனித்தனியே புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அமர்பூர் பஞ்சாயத்துத் தலைவி சாவித்ரி தேவி, ‘தனித்தனியாக கழிவறைகளைக் கட்டி அதற்கான பணத்தை ஒதுக்க முடியாது என்பதால், பத்து வீடுகளுக்கும் சேர்த்து ஒதுக்கிவருகிறோம். அதற்குள் இவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள். விரைவில், இருவருக்கும் கழிவறைகள் அமைத்து தருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.