இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்க தெலுங்கானா சட்ட சபையில் மசோதா தாக்கல்!

தெலுங்கானா மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முஸ்லிம்கள், எஸ்.சி. மற்றும் எஸ்,டி, பிரிவினரின் இட ஒதுக்கீட்டை உயர்த்தும் மசோதா ஒன்றை சட்ட சபையில் தாக்கல் செய்தார். அதில் முஸ்லிம்களுக்கே ஏற்கனவே இருந்த 4% இட ஒதுக்கீடு தற்போது 12%ஆக உயர்கிறது. அதேபோல் எஸ்.டி பிரிவினருக்கு ஏற்கனவே இருந்த 6% இட ஒதுக்கீடு தற்போது 10%ஆக உயர்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு முறை செயல்படுத்தப்படும்.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடுமை அமளியை ஏற்படுத்தினர். இட ஒதுக்கீடு மசோதா குறித்த பல கேள்வியையும் எழுப்பினர்.அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ” தெலுங்கானா மாநிலம் சுமார் 90% சிறுபான்மை சமூகம்,எஸ்,சி,எஸ்.டி பிரிவினர் அதிகம் வாழும் மாநிலம் இங்கு அவர்களுக்கான சம உரிமை வழங்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியில் இட ஒதுக்கீடு உயர்வு குறித்தும் பேசியுள்ளோம் அதனை இன்று நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்றார்.

மேலும் தமிழகம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதத்தில் பாதி அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தான் இங்கும் அவர்களின் சதவிகிதத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம் என்றார். இருந்த போதிலும் பாஜக எம்.எல்.ஏக்களின் அமளியால் சட்டசபை கூட்டம் பாழ்பட்டது. அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்களை அவை தலைவர் இடைநீக்கம் செய்தார். சட்ட மன்ற பாஜக எம்.எல்.ஏக்கள் வெளியே வந்ததும் சாலை மறியல், அரசு பஸ்களை சேதப்படுத்துதல், சாலையில் டயர்களை எரிப்பது போன்ற அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.