செய்திகள் தமிழகம் தலைப்புச்செய்தி

நாகர்கோவிலில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் – விவசாயிகள் பிரச்சனைகள், நீட் தேர்வு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆனந்த் மஹாலில் ஏப்ரல் 15,16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் ஜி.அப்துல் சத்தார் அனைவரையும் வரவேற்றார். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

மேலும், நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்பாட்டறிக்கையை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் சமர்பித்தார். இதை தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரஃபீக் அகமது நிறைவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது மற்றும் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் முகமது தும்பே ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

இந்த இரண்டு நாள் பொதுக்குழுவில் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள், நிகழ்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் டி.ரத்தினம் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள், கட்சியின் தொழிற்சங்கம், வர்த்தக அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  • இனயம் பெட்டக துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் :

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு குமரி மக்களை வஞ்சிக்கும் விதமாக, வர்த்தக துறைமுகத்திற்கு பதிலாக, இனயத்தில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. சரக்கு பெட்டக துறைமுகத்தால் குமரி மாவட்டத்தில் வாழும் 20 சதவீத மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும், வர்த்தக ரீதியில் எவ்வித பலனுமளிக்காத இனையம் துறைமுக திட்டத்தால், நாட்டின் பொருளாதாரம் வீணாவதோடு, திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கில் ஊழல், முறைகேடு நடைபெறவும் வாய்ப்புள்ளதால், குமரி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனயம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

  • பசு பாதுகாப்பு பெயரால் அதிகரிக்கும் பயங்கரவாதம்:

மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் பசுப் பாதுகாப்புப் படை என கூறிக்கொண்டு, வன்முறை சம்பவங்களில்  சங்பரிவார் பாசிச அமைப்பை சேர்ந்தவர்கள் மிருக பலத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரங்களில் போலியான செய்திகளை பரப்பி, தலித், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் திட்டமிட்டு தாக்குதல்களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

உத்தரபிரதேச தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அத்தகைய வன்முறை சம்பவங்கள் அரசின் துணையுடன் வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு அனுமதி பெறாத இறைச்சிக் கூடங்கள் என்று கூறி, திட்டமிட்டு முஸ்லிம்கள் நடத்தும் அனைத்துவிதமான இறைச்சிக் கடைகளும், பழைமையான அசைவ உணவகங்களும் மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். அதேபோன்று பாஜக ஆளும் ராஜஸ்தானிலும், கறவை மாடுகளை ஏற்றி வந்த முஸ்லிம்கள் மீது கவ் ரக்சா வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜனநாயக நாட்டில் பசுக்களைக் காக்கிறோம் என்ற பெயரில், அத்துமீறலில் ஈடுபடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அதன் தலையாய கடமையாகும். மேலும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

  • பாபர் மஸ்ஜித் இட உரிமை வழக்கில் ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படி  தீர்ப்பு வழங்க வேண்டும்:

அயோத்தி பாபர் மஸ்ஜித் இட உரிமை தொடர்பான ஆழமான உணர்வுப் பூர்வமான விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய ஆலோசனை நடைமுறை சாத்தியமற்றது. ஏனெனில் இதற்கு முன் அப்படி பலமுறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதோடு, பேச்சு வார்த்தையின் போது தான், சதித்திட்டம் மூலம் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பதால், அதன் மூலம் சமரச தீர்வை ஏற்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே நீதிமன்றம் தான் என கூறப்படும் நிலையில், சுமார் 68 ஆண்டுகள் நீடித்து வரும் உரிமை தொடர்பான பிரச்சனையில், நீதி வழங்குவதில் இருந்து நீதிமன்றம் விலகுவதாகச் சொல்வது நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பாபர் மஸ்ஜித் இடவிவகாரத்தில் ஆணங்களின்படி, சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும், அரசியல் அதிகாரத்துக்கு பணியாமல், நீதியின் பலத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

  • விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்:

வரலாறு காணாத வறட்சி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்துள்ள தமிழக விவசாயிகள், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வங்கி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் தோழர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் தொடர் மவுனம் சாதித்து வருகின்றது. அதோடு, போராடிவரும் விவசாயிகளை பாஜக தலைவர்கள் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.

ஆகவே, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி, விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசுக்கு அழுத்தத்தை தர வேண்டும். தமிழகத்தை சார்ந்த எம்.பிக்களும் அரசியல் மாச்சர்யங்களை மறந்து, தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

  • வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

தமிழகத்தின் முக்கிய நீராதார பருவமழை காலமான, வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போன காரணத்தால், தமிழகம் பெறும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அணை, குளங்களில் உள்ள தண்ணீர் வறண்டு விட்டன.  ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு, நீர்நிலைகளில் இருக்கும் நீரை பெரு நிறுவனங்கள் உறிஞ்ச தடை எற்படுத்துவதோடு, சட்ட விரோதமாக அவைகள் நிலத்தடி நீரை கொள்ளையிடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

  • நீட் தேர்வு – தமிழக மாணவர்களின் நலனை காக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:

தமிழகத்தில் மாநில கல்வி வாரியத்தின் அடிப்படையில் கல்வி கற்கும் மாணவர்கள் 90 சதவீத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நீட் தேர்வை நடத்துவது கூட்டாட்சி ஆட்சி முறைக்கு எதிரானது மட்டுமின்றி, சமூக நீதி கோட்பாட்டுக்கு முரணானது. மேலும், நீட் தேர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி, அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும், இந்தி, ஆங்கிலம் இரண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் பிரதானமான மொழிகள் என்பதால், நீட் தேர்வில் அம்மாநில மாணவர்கள் எளிதில் வெற்றுபெற்று, தமிழகம் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழி பிரதேச மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆக்கிரமிப்பை ஏற்படுத்துவார்கள். இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு எட்டாக்கனியாகிவிடுவதோடு,  மாநில நலனும் பலியிடப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இது ஏமாற்றமளிக்கிறது. ஆகவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மாணவர்களின் நலனை காக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

  • மத்திய பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கைகள்:

தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் பெரும்பாலும் சாமான்ய மக்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் திட்டங்களாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களுமாகவே இருக்கின்றன. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசுதான், கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டம், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம், கொங்கு பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் குழாய்கள் பதிப்புத் திட்டம், தேனி நியூட்ரினோ மையம், குமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனயம் துறைமுகத் திட்டம் என பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

அதேப்போன்று, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது. அதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசியலில் ஆதாயம் பெற வேண்டி,  உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. அதோடு இவ்விவகாரத்தில் உள்நோக்கத்தோடு, பாரபட்சமாக செயல்படும் மத்திய பாஜக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், தற்போது புதிய தேசிய தீர்ப்பாயத்தை அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

மத்திய பாஜக அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

  • நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கு வாக்குறுதியை துரிதப்படுத்த வேண்டும்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக செயல்படுத்துவதாக வாக்குறுதியளித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். அதனைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 500 மதுக்கடைகளை மூடினார். இந்நிலையில், தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவு வரையிலான மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு மூலம் 3000 க்கும் அதிகமான மதுக்கடைகள் மூடப்படும் என்பதால், தமிழகம் விரைவில் பூரண மதுவிலக்கை நோக்கி செல்ல நல்ல வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்படும் டாஸ்மாக் கடைக்கு பதிலாக, மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அரசின் இந்நடவடிக்கையானது பூரண மதுவிலக்கிற்காக குரல் கொடுத்துவரும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளுக்கும், பொது மக்களும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆகவே, குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்ற பொதுமக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து, அத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும், பூரண மதுவிலக்கு என்ற அரசின் வாக்குறுதியை செயல்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.