You are here
Home > Uncategorized > 7 வருட சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறை கைதிகள் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும்!: தெஹ்லான் பாகவி

7 வருட சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறை கைதிகள் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும்!: தெஹ்லான் பாகவி

கோவை: “7 வருட சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறை கைதிகள் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும்!” என்று SDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

கோவையில் இன்று 15.09.2013 மதியம் 12 மணி அளவில் SDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி SDPI மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அவர் செய்தியாளர்களிடம் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்:

மிகப் பெரும் தமிழ் இனப் படுகொலையை நடத்திய இலங்கை ராஜபக்சே அரசு சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜபக்சே அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை SDPI கண்டிக்கிறது. இது காமன்வெல்த் அடிப்படை நெறிகளுக்கு முரணானதாகும். எனவே காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது. மீறி நடந்தால் இந்தியா காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 21-9-2013 ஆம் தேதி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதை மாத்திரமே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவேதான் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அவர்களிடமே வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை உயர்த்தி வருகின்றன.

இதனால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து பெட்ரோல் பொருட்களின் விலைகளை உயர்த்தியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் இனப்படுகொலை செய்த இராஜபக்சேவும். குஜராத்தில் இனப்படுகொலை செய்த மோடியும் ஒரே இனம்தான். மனித குல எதிரியான இராஜபக்சேவை எப்படி எதிர்க்கிறோமோ அதேபோன்று குஜராத்தில் இனப்படுகொலை செய்த மோடியையும் SDPI எதிர்க்கின்றது.

பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் பிறந்த தமிழ் நாட்டில் மோடி வருகையை எதிர்த்து செப்டம்பர் 26 அன்று திருச்சியில் SDPI கட்சி கறுப்புக் கொடி ஏந்தி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

7 வருட சிறை தண்டனை ஒரு மனிதன் திருந்துவதற்கு போதுமானது என்ற காந்தியடிகளின் கருத்தின் அடிப்படையிலும், நமது நாட்டில் நீதி அமைப்பை கருத்தில் கொண்டு சந்தர்ப்ப வாதத்தினாலும், சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையிலும் தகுந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியாததன் காரணத்தினால் அப்பாவிகள் கூட தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு 7 வருட சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறை கைதிகள் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும்.

வரும் அக்டோபர் 1 முதல் 31 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துவது என்றும் இதில் தமிழகம் முழுவதிலும் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அரசியல் கலாச்சாரம் சீரழிந்து வரும் இச்சூழலில் மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் ஒடுக்கப்பட்டோருக்காக போராடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் படித்தவர்கள் இளைஞர்கள் உட்பட அனைவரும் இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Top