You are here
Home > Uncategorized > 2ஜி:சிதம்பரத்திற்கு தொடர்பில்லை: மத்திய அரசு

2ஜி:சிதம்பரத்திற்கு தொடர்பில்லை: மத்திய அரசு

புதுடெல்லி:2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பங்கில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக சனிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த கபில்சிபல் கூறியதாவது: சிதம்பரம் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு நிராகரிக்கிறது. அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக கூட்டணியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, சிதம்பரத்துடன் சந்திப்பு எதையும் நடத்தவில்லை. 2ஜி ஒதுக்கீடு அளித்தது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களை, தொலைத்தொடர்பு அமைச்சகம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டது குறித்து நிதியமைச்சகத்துக்குத் தெரியாது. இது ஆவணங்களிலும் உள்ளது. ஆ.ராசா பொறுப்பில் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளுக்கு நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் எந்தவகையில் பொறுப்பாக முடியும் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், சிதம்பரம் எங்கள் பெரும் மதிப்புக்குரிய அமைச்சரவை உறுப்பினர். அவர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, எவ்வித அச்சமும் இன்றி தனது அமைச்சரவைக் கடமைகளை ஆற்றி வருகிறார்.

நிதியமைச்சகம் எந்த விஷயத்திலும் தவறாக நடந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சிதம்பரத்தை பதவி விலக வேண்டுமென்றுகோரி பாஜகவினர் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்குகின்றனர். இது முறையான செயல் அல்ல. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த பாஜகவினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிபல் கேட்டுக் கொண்டார்.

2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக சிதம்பரம் – ஆ.ராசா சந்திப்பு நிகழ்ந்ததாக நிதியமைச்சக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்ட பின்னர்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. 2ஜி ஒதுக்கீட்டுக்கு முன் எந்த சந்திப்பும் நடக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தில் முக்கியமான விஷயம் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை சரியானதுதான். ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைதான் இப்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது”. என்று அவர் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. ஆனால் இது பொதுவான நீதிமன்ற நடைமுறைதான். அவரது சாட்சியத்தின்படி மேற்கொண்டு விசாரணை நடத்துவதா அல்லது தள்ளுபடி செய்வதா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றும் கபில் சிபல் கூறினார்.

தொலைத்தொடர்புத் துறையில் 1994-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் கொள்கைகள் தொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய 4 பக்க அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

Leave a Reply

Top