You are here
Home > Uncategorized > இந்தியா > 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு மனைவியை சந்தித்த கைதி!

27 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு மனைவியை சந்தித்த கைதி!

கோவை சூலூரில் ரூ.500 பணம் பறித்ததாக 1990-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற சுப்பிர மணியன், இதே வழக்கில் முன் விடுதலை பெற்ற தனது மனைவி பக்கா விஜயாவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சந்தித்தார். கணவரின் கைகளை பற்றிக்கொண்டு பக்கா விஜயா அழுத காட்சி அங்கிருந்த வர்களின் கண்களை கலங்க வைத்தது.

ஒரு கொலையால் ஆயுள் சிறை தண்டனை பெற்ற காதல் தம்பதியினரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவத்தில் எதிர்பாராத திருப்பம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நிகழ்ந்தது. ஆயுள் தண்டனை கைதிகளாக பிரிந்த தம்பதியினர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்தனர். பக்கா விஜயா, சுப்பிரமணியன் தம்பதிதான் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தில் இடம் பெற்றவர்கள்.

அவர்களைப் பற்றிய முன்கதை, ‘‘திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கழைக்கூத்தாடியாக இருந்த பக்கா விஜயா என்பவரை காதலித்து கடுமையான எதிர்ப்பு களையும் மீறி திருமணம் செய்துகொண்டார். விஜயாவுடன் கழைக்கூத்தாட்டதில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்திவந்தார் சுப்பிரமணி.

கடந்த 1990-ம் ஆண்டு சாலை யோரம் சுப்பிரமணியன் தம்பதி யினர் உறங்கிக் கொண்டிருந் தனர். அப்போது நள்ளிரவில் விஜயாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ரூ.500 பணத்துக்காக சுப்பிரமணியன், விஜயா இருவரும் சேர்ந்து ஒருவரை கொலை செய்துவிட்டதாக கோவை சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 1991-ம் ஆண்டு இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் சுப்பிரமணியனும், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் விஜயாவும் அடைக்கப்பட்டனர். இரண்டு சிறைச்சாலைக்கும் சில நூறு மீட்டர் தொலைவு இருந்தாலும் இருவரும் சந்திக்க முடியாத நிலை இருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பக்கா விஜயா, மன நலம் பாதிக் கப்பட்டு பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவரால் பேச முடியும், புரிந்து கொள்ள முடியும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். பக்கா விஜயாவின் நிலையை கண்டு மனம் கலங்கிய நளினி, தனது வழக்கறிஞர் புகழேந்தியின் உதவியுடன் பக்கா விஜயாவுக்கு விடுதலை பெற்றுத்தர முயற்சி மேற்கொண்டார். பக்கா விஜயா மீதான கொலை வழக்கின் ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற வழக்கறிஞர் புகழேந்தி, கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்கா விஜயா, வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர், வேலூர் அருகேயுள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பக்கா விஜயாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் நன்னடத்தை அடிப் படையில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளில் சுப்பிரமணியனும் ஒருவர்.

சிறையில் இருந்து விடுதலை யான சுப்பிரமணியனை, பக்கா விஜயா தங்கியுள்ள பெண்கள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

காப்பகத்தினுள் சுப்பிரமணி யனைப் பார்த்த விஜயா, மாமா… மாமா… என அழுதபடி ஓடிச் சென்றார். சுப்பிரமணியனின் கைகளை பற்றிக்கொண்ட விஜயா சிறிதுநேரம் கதறி அழுதார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் கைகளை பற்றிக்கொண்ட சுப்பிரமணி யனின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பியது. சிறிது நேரத்தில் இருவரும் சந்தோ ஷத்தில் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அங்கு இருவரின் சந்திப்பை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் சிறிது நேரம் கலங்கியது.

விடுதலையானது குறித்து சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘நாங்கள் பணத்தை எடுத்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை அவரை காப்பாற்றுவேன். ஊரில் கொஞ்சம் சொத்துக்கள் உள்ளன.

அந்த சொத்தை வைத்து வாழ்க்கையை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். சொத்தை எனக்கு கொடுக்காவிட்டால் வழக்கு தொடருவேன். கூலி வேலை செய்தாவது, எங்களது கடைசிக் காலத்தை கழித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

நன்றி: காமதேனு

Leave a Reply

Top