You are here
Home > இஸ்லாம் > கட்டுரை > “26/11 விசாரணை : நீதித்துறையும் தோற்றது ஏன்?” – நூல் அறிமுகம்

“26/11 விசாரணை : நீதித்துறையும் தோற்றது ஏன்?” – நூல் அறிமுகம்

கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதம், மும்பையில் தாக்குல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் செய்தனர் என்றும், அவர்கள்தான் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினர் என்றும் காவல்துறையும், உளவுத்துறையும் கூறின. ஆளும் அரசாங்கமும் அதற்கு தலையாட்டியது.

அதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்துத்துவா பயங்கரவாத குழுக்களின் தீவிரவாதத் தொடர்புகளை விசாரித்து, உண்மைகளை வெளிக்கொணர முனைந்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பலத்த சந்தேகம் இருக்கின்றது என்று அரசியல் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். பின்னர், அவர்களின் வாய்கள் மூடப்பட்டன.

அதன் பிறகு, நீண்ட நாட்கள் ஆய்வுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் முன்னாள் I.G. எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் இந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். ஆம்! அவர் எழுதிய Who Killed Karkare? The real face of terrorism in India (கர்க்கரேயைக் கொலை செய்தது யார்? இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம்) என்ற ஆங்கில புத்தகம் வெளிவந்தது.

இந்தப் புத்தகத்தை, மாதமிருமுறை ஆங்கில இதழான மில்லி கெசட்டின் பதிப்பகமான பெரோஸ் மீடியா வெளியிட்டது. இந்தப் புத்தகம் வெளிவந்ததிலிருந்து அது மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் இந்தத் தாக்குதல் தொடர்பாக மட்டுமின்றி, இந்தியாவில் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையில் நிலவும் பிராமணிய ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

அதே போன்று, மும்பை தாக்குதலில் ஹேமந்த் கர்க்கரே கொல்லப்பட்டதில் உள்ள உளவுத்துறை, இந்துத்துவா குழுக்களின் சதியையும் அம்பலப்படுத்துகிறது. மலையாளம், ஹிந்தி, தமிழ், உருது என்று பல்வேறு மொழிகளில் இந்த நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதலில் அனைத்து விதமான அரசு இயந்திரங்களும் தோல்வியைத் தழுவின. நீதித் துறையாவது வெற்றி பெறும் என்று பார்த்தால் அதுவும் தோல்வியைத் தழுவியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாபின் பின்னணி என்ன என்று தெரியாமலேயே, அல்லது அவர் அநியாயமாக சிக்க வைக்கப்பட்டாரா என்று நீதிமன்றம் வெளிப்படுத்தாமலேயே அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.

அதைப் பற்றி விளக்கும் விதமாகத்தான் தனது இரண்டாவது நூலை எழுதியுள்ளார் எஸ்.எம். முஷ்ரிஃப். “26/11 PROBE : WHY JUDICIARY ALSO FAILED?” (26/11 விசாரணை : நீதித்துறையும் தோற்றது ஏன்?) என்ற தலைப்பில் அந்த நூல் வெளிவந்துள்ளது. அதே பெரோஸ் மீடியாதான் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.

முந்தைய புத்தகத்தைப்போலவே இந்தப் புத்தகமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புவோம்.

நெல்லை சலீம்

Leave a Reply

Top