You are here
Home > கட்டுரைகள் > “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்

“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்

பெயர் : “மேலப்பாளையம் முஸ்லிம்கள்”

ஆசிரியர்:   பே. சாந்தி

வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்

பக்கங்கள்: 136

விலை: 80/-

தொடர்புக்கு: +91 99408 38051

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் முக்கியமான ஊர் மேலப்பாளையம். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களின் அத்துமீறல்கள் 1990களின் காலக்கட்டத்தில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடிகள் சொல்லில் அடங்கா துயரத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் சுற்றி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி, ஏர்வாடி, களக்காடு போன்ற ஊர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, மேலப்பாளையத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற ஊர்களை விட அதிகம்.

ஆனால், மற்ற ஊர்களை விட  அந்த மக்களின் “வாழ்க்கைத் தரம்” என்பது பின்தங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. அங்கு முக்கிய தொழிலாக பீடி சுற்றும் தொழில் இருக்கிறது. குடும்பத்தின் தேவையைப் போக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீடி சுற்றி, அதில் வரும் பணத்தை வைத்து, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.

அங்குள்ள இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வும் குறைவுதான். இதனால் காவல்துறையின் பூட்ஸ் கால்கள் வலுவாக பதிந்திருந்தன. 1992 பாபரி மஸ்ஜித் இடிப்பு, கோவை கலவரம், மண்டைக்காடு கலவரம் போன்றவை மேலப்பாளையத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அதில் ஒன்றுதான், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தருணத்தில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூடு. 18 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. 2 பேர் உயிரிழந்தனர். இது மேலப்பாளையம் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கொந்தளிக்கச் செய்தது.

இதுபோன்று தொடர்ந்து அவர்கள் மீது ஏவப்பட்டு வரும் தாக்குதல் என்பது காவல்துறையின் அடக்குமுறைகள் மட்டுமல்லாமல், கருத்து ரீதியான தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பத்திரிகைகளும், ஊடகங்களும் மேலப்பாளையம் முஸ்லிம்கள் தொடர்பான தவறான கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்தனர்.

இதனால், மேலப்பாளையம் முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது, கேட்பதற்கு யாரும் முன்வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மேலப்பாளையம் முஸ்லிம்கள், பாதிக்கப்படுவது சரிதான் என்ற பேச்சும் மக்களிடம் இருந்தது.

இது தொடர்பாக எழுத்தாளர் சாந்தி அவர்களின் களப்பணியின் கீழ் முகிழ்ந்ததுதான் “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” என்ற புத்தகம். இந்தப் புத்தகம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் தொடர்பான இதுவரை நடந்த அடக்குமுறைகளும், கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் பற்றியும் எடுத்துரைக்கின்றது. அது போன்று மேலப்பாளையம் முஸ்லிம்களின் ஆரம்ப நிலையையும், எதிர்காலத்தில் அவர்கள் மாற வேண்டிய சூழல்களையும் விளக்குகிறது இந்நூல்.

அதேபோன்று கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காவல்துறையினர் வெடிகுண்டு வைத்திருந்ததாக ஐந்து முஸ்லிம் இளைஞர்களை மேலப்பாளையத்தில் கைது செய்தனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல்துறைக்கும், அரசுக்கும் சிறிதும் அடி பிசகாமல் ஒத்து ஊதி வந்தன.

இதுபோன்ற அநீதிகளுக்கெதிராக பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்தை வலிமையாக பதிவு செய்து வரும் “விடியல் வெள்ளி” மாத இதழ் அங்கு முழுமையான தகவலை சேகரித்து 2013, செப்டம்பர் மாதம் “காவல்துறையின் கடைத்தெருவாகும் மேலப்பாளையம்” என்ற தலைப்பில் முழுமையான தகவல்களை மக்களுக்கு அளித்தது.

அதில், வழக்கறிஞர் பிரிட்டோ அவர்களின் நேர்காணல், சுற்றுவட்டார மக்களிடம் எடுத்த கள ஆய்வுகள், காவல்துறை அதிகாரிகளிடம் எடுத்த நேர்காணல், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் எடுத்த நேர்காணல் என்று அனைத்து விதமான தகவல்களையும் சேர்த்து உள்ளனர். இது இந்தப் புத்தகத்திற்கு கூடுதல் வலுவூட்டுகிறது.

இந்தப் புத்தகத்திற்கு மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், முஸ்லிம்களின் பிரச்னையை முஸ்லிமல்லாத ஒரு பெண் எழுதுவது பாராட்டுக்குரிய விஷயமாகும். ஏனென்றால், இது முஸ்லிம் சமூகத்தில் கூடுதல் பார்வையை ஏற்படுத்தும்.

எழுத்தாளர் சாந்தி அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் இழிநிலையை எடுத்துக் கூறுவது என்பது சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து, இதுபோன்ற பிரச்னைகளில் பாதிக்கப்படும் சமூகங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். சமூகக் களங்களில் உங்களுடைய எழுத்துப் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்.

இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், அரசு அதிகார வர்க்கங்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் கைப்பெட்டகம் என்றால் அது மிகையாகாது.

நெல்லை சலீம்

Leave a Reply

Top