You are here
Home > Uncategorized > இந்தியா > ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகத்தடை – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகத்தடை – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இதை எதிர்த்து டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட இதையடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு சார்பில் பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்துச் செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாத்திமா பாபு சார்பில் முன்வைக்கபட்ட மனுவில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற பசுமை தீப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 15-ம் தேதி அன்று பிற்பகலில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது அன்றையதினம் காலை 7.39 மணி அளவில் வேதாந்தா குழுமம் சார்ந்த ஏஜென்சிக்கு இந்த தீர்ப்பு நகல் இணையதளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதற்கு வருகிற மார்ச் மாதம் 14ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா? என்பதை ஜனவரி மாதம் 21-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கபட்டது.

Leave a Reply

Top