லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கும், புலன்பெயர்வுக்கும் காரணமான இந்திய பிரிவினை ஏன் மகத்தான இலக்கியங்களை உருவாக்கும் கருவாக மாறவில்லை? என்ற கேள்வி பல வேளைகளின் நம் மனங்களில் எழுவதுண்டு.
வரலாற்றாய்வாளர்களும் நுட்பமாக பிரிவினையின் சமூக-கலாச்சார எதிர்விளைவுகளை குறித்து ஆராயவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு என்பதால் அது குறித்து ஆராய்ச்சிகள் நடக்காமல் இருந்திருக்கலாம். எவ்வகையான பிரிவினையும், புலன்பெயர்வும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது.
நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் உருது இலக்கியவாதி ஸஆதத் ஹஸன் மன்டோவின் நாவல்களும், சிறுகதைகளும் பிரிவினை ஏற்படுத்திய காயங்களையும், அதில் கண்ட மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்களையும் சித்தரிப்பதால் உருது இலக்கியத்தில் மாறுபட்டு நிற்கிறது.
அதிகார வெறிப்பிடித்த அரசியல்வாதிகள் வரலாற்றை புரிந்துகொள்ளாமல் பிரதமராகவும், அதிபராகவும் மாறுவதற்கு திடுதிப்பென எடுக்கும் தீர்மானங்கள் சில நிமிடங்களில் நண்பர்களையும் பகைவர்களாக எவ்வாறு மாற்றுகிறது? என்பது குறித்து அமிர்தரஸில் பிறந்த மன்டோ ஆராய்கிறார். அப்பொழுது மத போதனைகளும், மனித சமூகம் காலங்காலமாக வளர்த்து வந்த அன்பு, பாசம், கருணை போன்ற மிருதுவான உணர்வுகளும் காணாமல் போகின்றன.
பிரிவினைக்குப் பிறகு லாகூருக்கு தனது வசிப்பிடத்தை மாற்றிய மன்டோ, ஒழுக்க கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையும், மதுபானமும் பிற்கால கதைகளில் கண்ட பாலியல் கருத்துக்கள் காரணமாக பொது சமூகத்தில் காணாமல் போனார். ஆனால், பிரிவினையைக் குறித்து அசாதாரணமான நேர்த்தி மிகு கதைகளை எழுதிய ஒரே காரணத்தால் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.