You are here
Home > Uncategorized > வெளிநாட்டு முதலீடு:அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி – பாராளுமன்ற முடக்கம் தொடரும்

வெளிநாட்டு முதலீடு:அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி – பாராளுமன்ற முடக்கம் தொடரும்

புதுடெல்லி:பாராளுமன்றம் தொடர்ந்து முடங்குவதை பரிசீலிக்க நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொடர்ச்சியாக ஆறாவது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கின.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இது தவிர தெலங்கானா விவகாரம், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை ஆகியவற்றை மையமாக வைத்தும் மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்பினர்.

நேரடி அன்னிய முதலீடு விவகாரத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க.வும் அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளன. முன்னதாக நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். ஆனால் அதில் சுமுக
முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோருகின்றனர். ஆனால் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இரு அவைகளும் கூடிய உடனேயே அன்னிய முதலீடு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டவாறு அவைக்கு வந்தனர். இது தவிர தெலங்கானா தனி மாநிலம் கோரி தெலங்கானா பகுதி எம்.பி.க்களும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள மக்களைக் காக்க வேண்டும் என்று கூறி கேரள எம்.பி.க்களும் வாசக அட்டைகளை எடுத்து வந்தனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பியதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் முதலில் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போதும் அமைதி ஏற்படவில்லை. இதனால் இரு அவைகளும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Top