You are here
Home > தொடர்கள் > விருப்பும் வெறுப்பும்!

விருப்பும் வெறுப்பும்!

“அதிய்! தாங்கள் நல்லவர். ஏன் நீங்கள் எங்களுடன் சேரமாட்டேன் என்கிறீர்கள்? எனக்குத் தெரியும், மக்கள் அனைவரும் எங்களை எதிர்க்கிறார்கள் என்பதனால் தானே… ஊர்க்காரர்கள் ஒதுக்கி வைத்துள்ள பலவீனமான மனிதர்களும், சாதாரண மனிதர்களும் மட்டும்தான் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தானே உங்களுக்கு? நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஏற்றெடுத்துள்ள இந்தப் புனிதப் பணியை அல்லாஹ் வெற்றியடையச் செய்வான். அச்சமே இல்லாத ஓர் உலகம் உருவாக்கப்படும். ஏகாதிபத்தியம் வெற்றி கொள்ளப்படும்.”

நஜ்த் கோத்திரத் தலைவரும், மன்னருமான அதிய் இப்னு ஹாத்திமுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். அண்ணலாரை காண்பதற்காக அதிய் வந்திருந்தார். நஜ்துக்குச் சென்றிருந்த முஸ்லிம் படையிடம் பிடிபடாமல் தப்பித்து ஓடினார் அதிய். பல பிரதேசங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியில் அவர் இறுதித்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்.

அதிய் முதலில் ரோமுக்குச் சென்றார். ரோமச் சக்கரவர்த்தி அவருக்கு அபயம் அளித்தார். அரசவை விருந்தினராக அவர் தங்க வைக்கப்பட்டார். ஆடம்பர அரண்மனை வாசம் அவருக்கு ஒத்து வரவில்லை. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த பாலைவனப் புத்திரனான அதிய்யுக்கு அரண்மனையில் அடைந்து கிடக்க முடியவில்லை.

சுதந்திரமான அரபுக் கலாச்சாரம் எங்கே? அனாவசியமான ஆடம்பரக் கலாச்சாரம் எங்கே? இத்தனைக்கும் அதிய்யும் கிறிஸ்தவர்தான். அவருக்கு ரோமின் வாழ்க்கைப் பாணி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதிய் சிந்தித்தார்.

அண்ணலார் மக்களிடம் குறைகளைக் கேட்கும் நேரத்தில் அவர் மதீனா வந்தடைந்தார். அண்ணலாரைக் காண்பதற்காக அவர் காத்திருந்தார். அண்ணலார் ஒரு பெண்ணின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு குழந்தைகள் அந்தப் பெண்ணுடன் வந்திருந்தன. அண்ணலாருடன் அனைவரும் ஒரே பாயில் அமர்ந்திருந்தனர். எந்தவிதப் பேதமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக சாதாரணமாக அமர்ந்திருந்தார்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்.

ஆடம்பர அரண்மனைகளில் அரங்கேறும் ராஜ பரம்பரையின் டாம்பீகங்களைக் கண்டு சலித்துப் போயிருந்த அதிய்யுக்கு இது புதுமையாக இருந்தது. இறுதித் தூதரின் மேல் அதிய்யின் ஈர்ப்பு அதிகமானது.

அண்ணலாரைக் காண வந்த ஆட்கள் அகன்றவுடன் அதிய் அண்ணலாரிடம் வந்தார். தன்னை அறிமுகப்படுத்தினார். வந்தவர் யார் என்பதையறிந்த அண்ணலார் உடனே எழுந்து அதிய்யை வரவேற்று, அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். தாங்கள் அமரும் நாரினால் ஆன இருப்பிடத்தில் அதிய்யை அமரச் செய்தார்கள்.

அண்ணலார் அதிய்யிடம் உரையாட ஆரம்பித்தார்கள்: “அதிய்! தாங்கள் முஸ்லிம் ஆக வேண்டும். அப்படிச் செய்தால் ஈருலகிலும் தாங்கள் வெற்றி பெறுவீர்கள்.”

அதிய் கூறினார்: “நான் ஏற்கனவே ஒரு மதத்தைப் பின்பற்றி வருகின்றேன்.”

அண்ணலார்: “அது எனக்குத் தெரியும். தங்களுடைய மதத்தைக் குறித்து தங்களை விட எனக்கு நன்கு தெரியும்.”

இந்த உரையாடலின் இறுதி வாசகம்தான் நாம் முதல் பத்தியில் கண்டது. அதிய் நல்லவர். நல்லதை விரும்பும் மனமுடையவர். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைத்தபொழுது உடனடியாக அதனை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. பாரம்பரிய பழக்கவழக்கங்களின், அவரின் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளின் கைதியாக இருந்தார் அவர்.

ஆரம்பத்தில் அண்ணலாரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவர்களை வெறுப்பதற்குக் காரணமாக இருந்ததும் இதுதான். தான் மிகப் பெரிதாக எண்ணியிருந்த மையங்களில் ஓட்டைகளை நேரில் கண்டறிந்த பொழுதுதான் அவருக்கு யதார்த்தங்களை உணர முடிந்தது. இறுதியில் அண்ணலாரின் கரங்களைப் பற்றி அவர் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்டார்.

உலகத்தில் ஒரு கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படுகிறது என்பது மட்டுமே அந்தக் கொள்கையைச் சரிபார்க்கும் அளவுகோலல்ல. இறைத்தூதர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் சமூகங்களில் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன.

ஓராளுக்கு சத்தியத்தின் செய்தியை எத்தி வைத்தவுடன் அவர் நன்மையின் பாதையில் வரவேண்டும் என்றில்லை. இறைச் செய்தியை இயம்பும் பொழுது எல்லோருக்கும் முதலில் வேம்பாகக் கசக்கும். பின்னர் தேனாக இனிக்கும். இதனைத்தான் எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2 : 216)

Leave a Reply

Top