You are here
Home > Uncategorized > இந்தியா > விரதம், இருமுடிகட்டி என்ற எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் சபரிமலைக்கு சென்ற RSS தலைவர்!

விரதம், இருமுடிகட்டி என்ற எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் சபரிமலைக்கு சென்ற RSS தலைவர்!

கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் 18 படிகளில் ஏறுவதற்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடிகட்டி ஏற வேண்டும் என்பது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் வரும் பக்தர்களுக்கு 18 படிகளில் ஏற அனுமதியில்லை. அவர்கள் பின்வாசல் வழியாக வர வேண்டும்.

அதேசமயம், கோயிலின் தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர் மட்டும் தலையில் இருமுடியின்றி18 படிகள் மீது ஏறி வரலாம் என்ற பாரம்பரியம் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. திங்கள்கிழமை கோயிலுக்குச் சென்ற கேரள ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியப் பிரமுகரான வல்சன் திலன்கரி, கோயிலின் தந்திரிகளோடும், தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் ஆகியோருடனும் 18 படிகளில் ஏறினார்.

அதுமட்டுமல்லாமல் கோயிலில் பக்தர்கள் முன்னிலையில் ஒலிப்பெருக்கி மூலம் பேசிய வல்சன் திலன்கரி, கோயிலுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வராமல் தடுப்போம், கோயில் பாரம்பரியத்தைக் காப்போம் என்று பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவியது.

இதுகுறித்து அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயனும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியத்தை மதிக்காமல் சென்ற வல்சனை கடுமையாகச் சாடினார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் அரசியல் தலைவர்கள் கோயிலின் பாரம்பரியத்தை, மரபுகளையும் பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க ஆர்வம் காட்டவில்லை.

நான் கோயிலுக்குச் செல்லாதவன்தான். இருந்தாலும், சபரிமலைக்குச் சமீபத்தில் சென்றபோது, கோயிலின் பாரம்பரியப்படி, 18 படிகள் மீது நான் வரவில்லை. மாறாக, பின்புறம் வழியாகவே நான் சென்றேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கோயிலின் பாரம்பரியத்தைக் காக்கத் தவறிய தேவசம்போர்டு வாரிய உறுப்பினர் கே.பி.சங்கரதாஸை நீக்கக் கோரி, திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Top