You are here
Home > கட்டுரைகள் > மனதோடு மனதாய் > வாய்ப்பை இழந்த வலீத்!

வாய்ப்பை இழந்த வலீத்!

“முஹம்மத் பைத்தியம் என்று கூறுகிறீர்கள்.அவர் எப்பொழுதாவது பைத்தியம் போல் உளறுவதை நீங்கள் பார்த்ததுண்டா?”

குறைஷிகள் சொன்னார்கள்: “இல்லை.”

“அவர் ஜோசியர் என்று கூறுகிறீர்கள். வாழ்க்கையில் என்றைக்காவது அவர் ஜோசியம் படித்ததை நீங்கள் கண்டதுண்டா?”

“இல்லை.” – மீண்டும் அதே பதிலே வந்தது குறைஷிகளிடமிருந்து.

“அவர் சொல்வது கவிதை என்று கூறுகிறீர்கள். என்னை விட கவிதை அறிந்தவர் உங்களில் யாரும் இல்லை. முன்பு எப்பொழுதாவது முஹம்மத் கவிதை சொல்லி நீங்கள் யாராவது கேட்டதுண்டா?”

“இல்லை.” – குறைஷிகள் நம்பிக்கையிழந்து தலையாட்டினார்கள்.

“முஹம்மத் சொல்வது பொய் என்று கூறுகிறீர்கள். வாழ்க்கையில் என்றைக்காவது அவர் பொய் சொன்னார் என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?”

“இல்லை.” – மக்கள் மீண்டும் அதே பதிலையே சொன்னார்கள்.

வலீத் இப்னு முகீரா என்பவர்தான் மேற்கண்ட கேள்விகளைக் கேட்டது.

வலீத் குறைஷிகளில் அதிக பணக்காரர். கலைகளிலும், கவிதைகளிலும், இலக்கியத்திலும் நிபுணத்துவம் பெற்றவர். குறைஷிகளின் உதாரணப் புருஷர்.

இவரும் முஹம்மதின் வலையில் வீழ்ந்து விட்டாரோ என்பதே மக்காவாசிகளின் கவலையாக இருந்தது.

ஒருமுறை கஅபா ஆலயத்தின் அருகில் முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழும் அழகை வலீத் கண்டார். தொழுகையில் அண்ணலார் ஓதிய வசனங்கள் வலீதின் காதுகளில் விழுந்தன. அவற்றின் இலக்கிய அழகையும், பொருட்செறிவையும் கண்டு அவர் பிரமித்தார். ஆவேசப்பட்டார்.

அதே ஆவேசத்துடன் குடும்பங்கள் சங்கமித்த ஒரு சபையில் சென்று இவ்வாறு கூறினார்:

“இறைவன் மீது சத்தியமாக! நான் சில வாக்கியங்கள் கேட்டேன். அது மனிதனின் பேச்சல்ல. ஜின்களின் பேச்சுமல்ல. அல்லாஹ்தான் சத்தியம்! அந்த வாக்கியங்களுக்கு இனிமையும், ஈர்ப்பும் உண்டு. நான் இதுவரை படித்த அனைத்து வாக்கியங்களையும் விட அவை மிகச் சிறந்தவை. அவற்றை விட சிறந்த வாக்கியங்களை உருவாக்குவதற்கு ஒரு இலக்கியப் படைப்பாளியும் இல்லை.”

ஒரே மூச்சில் ஆவேசத்துடன் பேசி முடித்து விட்டு வலீத் தன் வீட்டுக்குச் சென்றார். மக்கள் மிரண்டு போய் நின்றார்கள். வலீத் மதம் மாறிவிட்டார். குறைஷிகள் அனைவரும் இனி மதம் மாறுவர். வலீத் மக்களிடம் உரையாற்றிய அந்த உரைதான் இந்தக் கருத்துக்கு மக்கள் வரக் காரணமாயிற்று.

வலீத் ஒரு காரியத்தை சரி என்று தீர்மானித்தால் அதனை எதிர்ப்பதற்கு அங்கே யாரும் இல்லை. முஹம்மதை வலீத் ஆதரிப்பது மக்காவைப் பிடித்து உலுக்கும்.

அபூஜஹ்லுக்கு இந்த விவரம் தெரிய வந்தது. பதறியடித்து வலீதிடம் ஓடி வந்தான். நீண்ட நேரம் வலீதுடன் பேசினான். அந்த நீண்ட பேச்சுக்குப் பின் ஒரு வழியாக வலீதைத் தன் வசம் ஆக்கினான் அபூஜஹ்ல். அதன் பின் மக்களிடம் அழைத்து வந்தான்.

அப்போதுதான் வலீத் இப்னு முகீரா மேற்கண்ட கேள்விகளை மக்களிடம் கேட்டார். பேச்சின் போக்கு பொதுக் கருத்துக்கு எதிராகப் போகிறதோ என்று அபூஜஹ்லும் ஐயப்படாமல் இருக்கவில்லை. அவனுக்கு இதயத் துடிப்பு அதிகமாகியது. பதட்டத்தை வெளிக்காட்டாமல் வலீதைத் தீர்க்கமாகப் பார்த்தான். முஹம்மதை ஆதரித்து வலீதின் வாயிலிருந்து கருத்துகள் வந்து விழுந்து விடுமோ என்று அவன் உள்ளம் பதை பதைத்தது.

இதற்கிடையில் கூட்டத்தில் ஒரு ஆள் இவ்வாறு கேட்டார்: “முஹம்மத் பைத்தியமில்லை. ஜோசியருமில்லை. கவிஞரும் இல்லை. பொய் சொல்பவரும் இல்லை. அவருடைய வாக்குகள் குறித்து தாங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

இந்தக் கேள்விக்கு வலீத் என்ன பதில் கூறப் போகிறார் என்று அபூஜஹ்ல் உட்பட அனைவரும் சங்கடத்துடன் நோக்கி நின்றனர். ஊரில் தனக்குள்ள அந்தஸ்தை வலீத் எண்ணிப் பார்த்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாக்குகளில் வலுவாக நிற்கும் சத்தியத்தை விட அவர் முக்கியத்துவம் கொடுத்தது மக்காவில் நிலவில் நின்ற சம்பிரதாய சமூக நடவடிக்கைகளுக்கு.

குறைஷிகளின் பாரம்பரியப் பெருமையைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களுக்கிடையில் தனக்கு இருக்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் கெடுத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. வலீத் இப்னு முகீரா மனசாட்சியைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, மக்களிடையே இவ்வாறு உரைத்தார்:

“இது வெறும் மந்திரவாதம். முஹம்மத் எங்கிருந்தோ அதனைக் கேட்டுப் படித்திருக்கிறார். கணவனையும், மனைவியையும், மக்களையும், உறவினர்களையும் அது பிரிப்பதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? முஹம்மத் சூனியம் செய்பவர். அவரின் வாக்குகள் மாயாஜாலங்கள்.”

வலீத் இப்னு முகீரா இதன் பின்னர் இஸ்லாத்தைத் திரும்பிக்கூட பார்க்க முடியாமல் போனது. சத்தியத்தின் பால் விடுக்கப்படும் அழைப்பு பலமுறை செய்யப்படும் என்றில்லை. உள் மனதில் ஏற்படும் அழைப்பின் முதற்கட்ட வாய்ப்புகளில் அனுகூலம் இல்லையெனில் பிற்பாடு அந்த வாசல் அடைபட்டு விடும்.

Leave a Reply

Top