You are here
Home > Uncategorized > மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான ஒரு காரணி வறுமை!: உச்சநீதிமன்றம்

மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான ஒரு காரணி வறுமை!: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:மரண தண்டனை விதிக்கும் முன்பு குற்ற வாளிகளின் பொருளாதார நிலையையும் நீதிமன்றங்கள் பரிசோதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான காரணியாக வறுமையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனைவி மற்றும் 3 பிள்ளைகளைக் கொலை செய்த ஒரு தையல் தொழிலாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகளான சுதான்ஷு ஜோதி முகோபாத்யாயா, குரியன் ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக இவ்வழக்கில் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பது: “வறுமை, மன நலப் பிரச்னைகள் உள்ளிட்ட வாழ்க்கையின் சிக்கலான அழுத்தங்களை தண்டனையைக் குறைப்பதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளலாம். தண்டனையைக் குறைப்பது தொடர்பாக பச்சன் சிங், மச்சி சிங் வழக்குகளில் விவரித்த சிறப்பு காரணங்களில் இக்காரணங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தையல் தொழிலாளி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் குத்திக் கொலை செய்ததாக வழக்கு. இவருக்கு ஒரு மகளும் உண்டு. ஒரு மகன் ஆஸ்த்மா நோய் பீடிக்கப்பட்டிருந்ததால் தொடர் சிகிச்சை தேவைப்பட்டது.

ஏழ்மை மற்றும் உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளி ஒரு நாள் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ளார். மனைவியும், பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே மரணித்து விட்டனர். மகளுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இவர், மகளுக்கு குடிக்க தண்ணீர் வழங்கிய பிறகு தலையணையை பயன்படுத்தி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்து விட்டு போலீஸில் சரணடைந்தார்.

இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றமும், மும்பை உயர்நீதிமன்றமும் தையல் தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குற்றவாளியான தையல் தொழிலாளி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இவ்வழக்கை அபூர்வமான வழக்காக பரிசீலித்த உச்சநீதிமன்றம் குற்றவாளியின் பொருளாதார நிலையைக் குறித்து ஆராய்ந்தது.

குற்றவாளிக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. “முன்னர் குற்றம் எதுவும் செய்யாத இந்த நபருக்கு மறுவாழ்வு அளிக்கவும், மாற்றியெடுக்கவும் இயலும் என்று கருதுகிறோம். ஆகையால் இவரை சமூகத்திற்கு ஆபத்தானவராக கருத முடியாது. கடுமையான ஏழ்மை மூலமே இவர் கொலை செய்துள்ளார். மகளை கத்தரிக்கோலால் குத்திய பிறகு குடிக்க நீர் கொடுத்து விட்டு பின்னர் கொலை செய்ய கத்தரிக்கோலை உபயோகிக்காததும் குற்றவாளியின் மன நிலையை தெளிவுபடுத்துகிறது” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மரணத் தண்டனை விதிக்கும்போது குற்றவாளிகளின் பொருளாதார நிலையையும் பரிசோதிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி குரியன் ஜோஸஃப் தெரிவித்தார்.

Leave a Reply

Top