You are here
Home > Uncategorized > ரூபாய் மதிப்பு பலத்த சரிவு!

ரூபாய் மதிப்பு பலத்த சரிவு!

மும்பை:அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான மதிப்பு எக்காலமும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஒரு சில வாரங் களாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நேற்று மதியம் முதல் வீழ்ச்சியில் இருந்த ரூபாய் மதிப்பு 52.84 இல் நிலைப்பெற்றது.

தொழில் உற்பத்தி குறியீடு மைனஸ் 5.1 சதவீதத்தை எட்டியதுடன் நாட்டின் பொருளாதார துறை ஸ்திரமற்றதாக மாறிவிடும் என கருதி வர்த்தகர்கள் பெருமளவில் அந்நிய செலாவணி சந்தையில் ரூபாயை விற்றுவிட்டனர். இத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூபாயிலிருந்து மாறி டாலரை வாங்கியதுடன் ரூபாய் வீழ்ச்சியை நோக்கி சென்றது. இன்று காலையில் 53க்கு கீழே ரூபாய் வர்த்தகம் துவங்கும் என கருதப்படுகிறது.

வளர்ச்சி நோக்கத்தை அடைய பாடுபடும் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தொழில் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அக்டோபரில் வளர்ச்சி சதவீதம் 5.1 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11.4 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வாண்டு செப்டம்பரில் வளர்ச்சி சதவீதம் 1.9 சதவீதம் ஆகும்.

தொழில் உற்பத்தியின் 76 சதவீதத்தை கையாளும் உற்பத்தி துறையின் வளர்ச்சி ஆறு சதவீதமாகவும், மூலதனப்பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி 25 சதவீதமாகவும் சுருங்கிவிட்டது. மின்சார உற்பத்தி ஒன்பது சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைந்துவிட்டது. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் தொழில் உற்பத்தி வளர்ச்சி 3.5 சதவீதமாகும்.

ஏற்றுமதி துறையில் தளர்ச்சி மற்றும் மூலதன வரத்தின் குறைவு ஆகியவற்றிற்கு இடையே தொழில் உற்பத்தியும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கிடையே, நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சி பங்குச் சந்தையையும் பாதித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 343.11 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 15,870.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,360.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,839.96 புள்ளிகள் வரையிலும் சென்றது.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ்., ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ 102.10 புள்ளிகள் சரிவடைந்து, 4,764.60 புள்ளிகளில் நிலைபெற்றது.

வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 4,910.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,755.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Leave a Reply

Top