You are here
Home > Uncategorized > ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டதாக பஸ்ஸாருல் ஆஸாத்

ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டதாக பஸ்ஸாருல் ஆஸாத்

டமாஸ்கஸ்:அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் சிரியாவில் எதிர்ப்பாளர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டதாக அந்நாட்டின் ஏகாதிபத்திய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் ஐ.நாவுக்கு தெரிவித்துள்ளார். சிரியாவின் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்க இருக்கவே இத்தகவலை ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிரியா அரசின் ராணுவ நடவடிக்கையைக்குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுச்செய்ய ஐ.நாவின் மனித உரிமை பிரிவு தலைவர் நவிபிள்ளை கோரிக்கை விடுப்பார் என கருதப்படுகிறது. இந்நிலையில் ஆஸாத் பான் கீ மூனை தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.

சிரியா முழுவதும் எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை குறித்து நேற்று முன்தினம் ஐ.நா தனது கவலையை வெளியிட்டிருந்தது.ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக்கொண்டுவர சிரியா அரசுக்கு ஐ.நா வலியுறுத்தியது.

பஸ்ஸாருல் ஆஸாத் ராஜினாமா செய்யவேண்டுமென அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்ப்பாளர்கள் மீது கட்டவிழ்த்துப்படும் அடக்குமுறைகளை நிறுத்துவதற்கு சிரியா அரசிடம் பல தடவை சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்தபிறகும் பஸ்ஸாருல் ஆஸாதின் அரசு செவிசாய்க்கவில்லை.ஐந்து மாதங்களாக தொடரும் போராட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கடந்த சில தினங்களில் மட்டுமே ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாட்டில் ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவந்ததாக சிரியா அரசு அறிவித்தபோதிலும் நாட்டின் கடற்கரை நகரமான லடாக்கியாவிலும், கிழக்கு பிரதேசமான டையர் எஸ்ஸூரிலும் இன்னமும் ராணுவம் எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறையை கையாளுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இங்கே ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை தவிர்ப்பதற்கான தந்திரம்தான் ஆஸாதின் முயற்சி என கருதப்படுகிறது.

Leave a Reply

Top