You are here
Home > Uncategorized > மோடி மந்திரம் இனி பலிக்காது!

மோடி மந்திரம் இனி பலிக்காது!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில் மோடி, தான் பிரதமராக வரவேண்டும் என்பற்காக தன்னுடைய மோடி மஸ்தான்  வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டும் அல்ல. உலக நாடுகள் கூட குஜராத் வேலைவாய்ப்பில் கல்வி, வாழ்வாதாரத்திலும், சமூக  முன்னேற்றத்திலும் அனைத்து தளங்களிலும் முன்னேறியதாக செய்தியை கூறுவதற்கு அனைத்து மீடியாக்களும், விலை பேசப்பட்டு வாங்கப்பட்டது. அதன் மூலம் அனைத்து அரசியல் தலைவர்களும் நம்ப வேண்டும் என்ற வேலையை இப்போதே செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

அதன் பிரதிபலிப்பாகத்தான் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி பாரதிய ஜனதாக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். மோடி மட்டும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாம் பிரதமர் ஆகிவிடுவோம் என்கிற கனவில் மூழ்கடிக்கப்பட்டு இதுவரை அரசியலில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை செலவிட தயாராகிவிட்டார். செலவு செய்து கொண்டிருக்கிறார். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை – மோடியின் மாயாஜாலவித்தை என்ன என்பதை குற்றச்சாட்டுகளாக முன் வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

8ம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் கல்லூரி பேராசிரியர் வரை இணையத்தின் வாயிலாக பேஸ்புக் மூலம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். முகநூலில் உண்மையை சொல்லுவதற்கும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டியதில்லை. மீடியாக்களில் பணத்தை கொடுத்து உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவது போல் இங்கு யாரும் பதிவு செய்யமாட்டார்கள்.

2001-2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி குஜராத் எழுத்தறிவு சதவீதம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 17வது இடத்திலேயே உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த மாடர்ன் புட்ஸ், விதேஷ் சஞ்சார் நிறுவனம் போன்றவை தனியாருக்கு விற்கப்பட்டன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில்தான் கர்நாடகத்தில் 11,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். 2001ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல் அமைச்சராக பதவியேற்றார். 2002ல் தான் ஒரு ஹிந்துத்துவ மதவெறியன் என்பதை நிரூபித்தார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இனப்படுகொலையில் பல அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குல்பர்கா சமூகக் கூடத்தில் மட்டும் 60 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

காங்கிரசின் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது நடந்த கலவரத்தை மோடி அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் ஆட்சியில்தான் மாண்டு போன வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடந்தது.

ராணுவ பேர ஊழல், மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்ததில் ஊழல் என உலகமே வியக்கும் வண்ணம் ஊழல் நடைபெற்றது. உலகமயாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடிப்பதிலும் அதை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.

குஜராத்தை சோதனைச் சாலையாக மாற்றியதைப் போல் ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்ற நினைக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகள் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தமிழீழத்தை அறிவிக்கக்கூடிய நேரத்தில்தான் இந்திய அரசை ஆட்சி செய்துகொண்டிருந்த பா.ஜ.க.வின் வாஜ்பாய் அரசு, “யாழ்ப்பாணம் மீது புலிகள் தாக்குதலை நிறுத்தவேண்டும், சிங்கள ராணுவம் பாதுகாப்பாக வெளிவர வேண்டும், இல்லையேல் இந்திய கப்பல் படையை அனுப்பி அவர்களை மீட்டெடுப்போம், ஈழத்தில் இரத்த ஆறு ஓடும்” என்று புலிகளை மிரட்டினார்கள்.

இப்படி தமிழினத்திற்கும், ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் எதிரானவர்கள்தான் மோடியும், அவர் சார்ந்துள்ள சனாதன ஹிந்துத்துவவாதிகளும்.

வைகை அனீஷ்

Leave a Reply

Top