You are here
Home > இஸ்லாம் > மொழி

மொழி

மொழி என்பது இன்று மக்களிடம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் உயர்ந்தவர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் சமூகத்தில் நன்கு படித்தவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

நாம் ஒரு அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கு சிறுவன் ஒருவன் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளை பேசுகிறான். உடனே நம்முடைய உள்ளத்தில் பெரிய ஏக்கம். ஆகா… இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுகின்றானே என்று.

இன்று ஆங்கிலத்தை விரும்பாத மக்கள் இல்லை என்ற அளவுக்கு ஆங்கிலத்தின் மோகம் அதிகரித்து விட்டது. இது மேலை நாட்டவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தியது. இதனால் மக்கள் நம் நாட்டு மொழியை பேச வெட்கப்படுகிறார்கள்.

பன்மொழிகள் பேசும் மக்கள் கொண்ட இந்திய தேசத்தில், மொழியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் அதிகம். பல மொழிகளை மக்கள் பேசும் சூழ்நிலையில், சமூக  பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக ஆங்கில மொழிக் கல்வியை நோக்கி புவிஈர்ப்பு விசை போன்று மக்கள் இழுக்கப்படும் பரிதாபமான நிலை.

இந்தியாவில் ஆங்கில மொழி பற்றி  வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் தாய்மொழியாகவே அது வடிவெடுத்துள்ளது எனலாம். ஆனால், மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்றக் கருவிதான் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்தவுடன் அவர்களுக்கு பல மொழிகளைக் கற்றுக் கொடுத்தான். மனிதன் ஒரு காலகட்டத்தில் ஒரு செய்தியை தெரிவிக்க புறாக்களை பயன்படுத்தினான். பின்னொரு காலகட்டம் வந்தது. தந்தி, தபால், தொலைபேசி, தொலைநகல் என்று பயன்படுத்தப்பட்டது.

தற்பொழுது தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வசதிகளை மனிதன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறான். இமெயில், டுவிட்டர், பேஸ்புக் என்று தகவல் பரிமாற்றம் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் மனிதனின் பயன்பாடுகள் மொழிகளை கற்பதன் விஷயத்தில் எந்தளவு கவனங்கள் செலுத்துகின்றன என்பதை பார்ப்போம்.

அரபு மொழி

உலகில் உள்ள மொழிகளில் அரபி மொழி இலகுவானது. இலக்கண ரீதியாகவும் அரபு மொழிதான் மற்ற மொழிகளை விட இலகுவானது. அதை கற்பதில் முஸ்லிம் சமூகம் போதிய ஆர்வம் செலுத்துவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

உலகக் கல்விக்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், மார்க்கக் கல்வியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், மொழிகளைக் கற்பதில் சிரமத்தை மேற்கொள்கிறார்கள். இன்று நமக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஆலிம்கள் மதரஸாக்களில் தங்கி ஏழு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என படித்து பட்டம் பெறுகிறார்கள்.

இவர்களால் ஆங்கிலத்தையும் இதர மொழிகளையும் இலகுவாக கற்று வருகின்றார்கள். ஏனென்றால், இவர்கள் அரபு மொழியை ஆரம்பத்திலேயே இலக்கணத்தோடு கற்கின்றார்கள். அதனால் அவர்களால் எந்த மொழியையும் இலகுவாக கற்றுக்கொள்ள முடிகிறது.

ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஒழித்துக் கட்டப்பட்டார்கள். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக் கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருந்த போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தியது அரசு. அவையாவன: அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது. இதனால் முஸ்லிம்களின் பாரம்பரியமும், அவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமும் அழிக்கப்பட்டது என்பதுதான் உண்மையானது.

உருது மொழி

உருது மொழி இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடிய ஒரு மொழியாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலங்களில் திட்டமிட்டு அது மக்களிடம் இருந்து மறக்கடிக்கப்பட்டது.

உருது மொழியை மக்களிடம் இருந்து மறக்கடிக்கச் செய்ய ஹிந்தியை பயன்படுத்தினார்கள். நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த சிறிது காலத்தில் ஹிந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது.

உருது மொழி பேசக்கூடிய அறிஞர்கள் இன்று ஏராளமாக இருக்கின்றார்கள். உருது மொழியில்தான் ஏராளமான புத்தகங்களும், ஆய்வுகளும் உள்ளன. இமாம் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் உருது மொழி பேசக்கூடியவர்கள்.

உருது மொழியை அழிப்பதில் அவர்கள் போதியளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். டெல்லி சுல்தான்களின் ஆட்சியின்போதுதான் (கி.பி. 1206-1527) தற்போது உத்திரப் பிரதேசத்தில் பேசப்படும் வகையில் உருது மொழி வடிவம் பெற்றுள்ளது. அதன் பின்னர் முகலாயப் பேரரசின் கீழ் (கி.பி. 1526-1858) உருது மொழி அபார வளர்ச்சி கண்டது.

பாரசீக மொழி, அரபி மொழியைப் போலவே உருது மொழியை வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருக்கிறது. உருது மொழி 39 அடிப்படை எழுத்துகள், 13 கூடுதல் எழுத்துகள் என 52 எழுத்துகளுடன் உள்ளன.

இதில் பெரும்பாலும் அரபு எழுத்துகளும் மிகச் சொற்ப அளவில் பாரசீக எழுத்துகளும் இணைந்துள்ளன. உருது மொழியின் சிறப்பு என்னவெனில் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளின் ‘ஒலி’ வடிவமும் உருதுவில் வெளிப்படும் என்பதுதான். (வங்காள தேசம் பிரிக்கப்படுவதற்கு முன்) மேற்கு வங்கத்தில் பாரசீக மொழிப் பத்திரிகைகள் முதலிடத்திலும், உருது செய்தித்தாள்கள் இரண்டாம் இடத்திலும் இருந்தன.

பாரசீக மொழி அரசின் அதிகார மொழி இல்லை என்றான பின் உருது மொழி முக்கியத்துவம் பெற்றது. உருதுவின் முதல் செய்தித் பத்திரிகை ஜாம் இ ஜஹான் நுமா. ஹரிதர் தத்தா என்பவர் 1822ல் இப்பத்திரிகையை தொடங்கியுள்ளார்.

பிரபல பெங்காலி பத்திரிகையாளரும் ‘சம்பத் கொவ் முடி’ என்கிற வங்காளப் பத்திரிகையின் நிறுவனங்களில் ஒருவருமான தாரா தத்தாவின் மகன்தான் ஹரிஹர் தத்தா. 1850 முதல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 வரை உருது இதழியல் வளர்ச்சி கண்டிருக்கிறது.

1948ல் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது உருதுவில்தான் எஃப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1949ல் பாபரி மஸ்ஜித் வழக்கு எஃப்.ஐ.ஆரும் உருதுவில்தான் இருந்தது. (ரேபரோலி நீதிமன்றத்தில்). இதே வழக்கு 1975ல் ஹிந்தியில் வருகிறது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருக்கிறார்.

இதுதான் உருதுவின் நிலை.

Leave a Reply

Top