You are here
Home > Uncategorized > மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை கைப்பற்றியது

மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை கைப்பற்றியது

வங்கதேசத்துக்கு எதிராக தாகாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

வங்கதேசம் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் தாகாவில் நடந்தது.

முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 355, வங்கதேசம் 231 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின் 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு தமிம் இக்பால்(83) ஆறுதல் அளித்தார். பின் முஷ்பிகுர் ரஹிம், சாகிப் அல் ஹசன் ஜோடி போராடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த போது சாகிப்(55) அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 69 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த நயீம் இஸ்லாம்(3), நாசிர் ஹொசைன்(3), சுக்ரவாதி ஷுவோ(0), ருபெல் ஹொசைன்(7) சொற்ப ரன்களில் வெளியேறினர். இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 278 ரன்களுக்கு சுருண்டு, 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சுழலில் அசத்திய தேவேந்திரா பிஷூ 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 எனக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை கிர்க் எட்வர்ட்ஸ் தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருது வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Top