You are here
Home > Uncategorized > மெமோ சர்ச்சை:சர்தாரியுடன் ஹக்கானி சந்திப்பு

மெமோ சர்ச்சை:சர்தாரியுடன் ஹக்கானி சந்திப்பு

இஸ்லாமாபாத்:ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தடுக்க அமெரிக்காவின் உதவியை கோரும் ரகசிய மெமோ அனுப்பப்பட்டது குறித்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் அரசியலை உலுக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கான பாக்.தூதர் ஹுஸைன் ஹக்கானி அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றதாகும்.

அப்போட்டாபாத்தில் அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை அமெரிக்க ராணுவம் கொலைச் செய்ததாக கூறிய சூழலில் பாகிஸ்தானில் ராணுவ புரட்சிக்கு வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறான சூழல் ஏற்பட்டால் உதவவேண்டும் என கோரி சர்தாரியின் கடிதம் ஹுஸைன் ஹக்கானி மூலமாக அமெரிக்காவின் ஒருங்கிணைந்த படைத் தளபதி மைக் முல்லனுக்கு அளிக்கப்பட்டது என்பதுதான் அக்குற்றச்சாட்டு. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அதனைக் குறித்து விளக்கமளிக்க ஹக்கானியை பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி பாகிஸ்தானிற்கு அழைத்திருந்தார்.

அமெரிக்காவிடம் நம்பிக்கையுடன் செயல்படும் ராணுவ பிரிவை உருவாக்கலாம் எனவும், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் எனவும் வாக்குறுதி அளித்த கடிதத்தை பாக்.-அமெரிக்கா தொழிலதிபர் இஜாஸ் மைக் முல்லனிடம் ஒப்படைத்தார். இவர்தாம் இதனைக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மெமோகேட் என அழைக்கப்படும் இக்கடிதத்தை குறித்து விசாரணை நடத்தவேண்டுமென பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக விசாரணை நடத்தவேண்டுமென முன்னாள் பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட உயர் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் விவாதத்தை கிளப்பியதை அடுத்து ஹுஸைன் ஹக்கானி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இதற்கிடையே பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் ஏதேனும் வகையில் தலையிட கருதியிருந்தால் அதனை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ராணுவ தளபதி அஷ்பாக் கயானியிடம் நவாஸ் ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார். ஹக்கானிக்கு எதிரான நடவடிக்கையை குறித்து பிரதமர் தீர்மானிப்பார் என பாதுகாப்பு துறை அமைச்சர் அஹ்மத் முக்தார் தெரிவித்துள்ளார். நாட்டில் ராணுவம் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என அவர் பதலளித்துள்ளார். இதற்கிடையே மெமோ விவகாரத்தின் உண்மை நிலையை அறிவதற்காக தொழிலதிபர் மன்சூர் இஜாஸுடன் ஐ.எஸ்.ஐ தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் அஹ்மத் ஸுஜா பாஷா லண்டனில் சந்திப்பை நடத்தினார்.

Leave a Reply

Top