You are here
Home > Uncategorized > முஸ்லிம்கள் மீது ராகுலின் அவதூறு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

முஸ்லிம்கள் மீது ராகுலின் அவதூறு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

புதுடெல்லி: பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் முஸஃபர் நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு சமாஜ்வாதி, இடதுசாரி மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

“கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. தொடர்பு வைத்துள்ளது என்று இந்திய உளவுப் பிரிவினர் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர்” என்று இந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ராகுலின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக முஸ்லிம் இளைஞர்களின் நேர்மையில் சந்தேகம் ஏற்படும் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் அஸம் கான் கூறினார். முஸஃபர்நகர் கலவரத்துக்கு பா.ஜ.க.தான் காரணம் என்று ஒரு நாள் குற்றம் சாட்டுகிறார். மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டுகிறார். அவரது பொறுப்பற்ற பேச்சுக்கு முஸ்லிம் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர் கேட்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது என்றார் அஸம் கான்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சமாஜவாதி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சமுதாயத்தினரை தீவிரவாதிகளுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அதுல் அஞ்சன் கூறினார்.

இதன் மூலம் முஸ்லிம்கள் மீது ராகுல் வெறுப்பை ஏற்படுத்துகிறார். ராகுல் காந்தியின் பிரச்சார அறிக்கைகளை யார் தயாரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் மூலம் மீண்டும் பதற்றத்தை அவர் தூண்டுகிறார் என்றார் அதுல் அஞ்சன்.

பா.ஜ.க.வின் ஷாநவாஸ் ஹுஸைனும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Top