You are here
Home > கட்டுரைகள் > மகாபலிபுரப் பயணம்!

மகாபலிபுரப் பயணம்!

நாங்கள் ஆறு நண்பர்கள் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் சென்றோம். பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்த அந்தச் சூழலில், மக்களின் மனதைக் கவரக்கூடியதாக கல் சிற்பங்கள் காட்சியளித்தன. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்கள் அதைச் சுற்றிலும் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்தோடு வந்தவர்கள் உணவு பரிமாறிக் கொண்டும், இளம் ஜோடிகள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டும், குழந்தைகள் சறுக்குப் பாறைகளில் வழுக்கி விளையாடிக் கொண்டும் தங்கள் பொழுதுகளை மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர்.

பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து, அதிலிருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நாங்களும் சென்றதற்கான அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

அதில், முக்கியமாக இருப்பது ஒரு பாறையின் மேல் உருண்ட பெரிய பாறை ஒன்று அழகாக, அதில் எந்தவித தாங்கலும் இன்றி நிற்கின்றது. இது அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது. பெரும்பாலானவர்கள் அதன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இதில், வெளிநாட்டவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரம் கழித்து சிற்றுண்டி அருந்திவிட்டு அழகான புல்தரையில் அமர்ந்து இயற்கை தொடர்பான விஷயங்களை ஆராயத் தொடங்கினோம். நாங்கள் மொத்தம் ஆறு பேர் சென்றிருந்தோம். அங்கு நிறைந்திருந்த இயற்கைச் சூழலும், அமைதியான அந்த இடமும் முன்னோர்களின் நினைவை விவாதிக்க வைத்தது. பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்களும், அமைக்கப்பட்ட வடிவங்களும் காஞ்சிக்கே உண்டான பெருமை என்பதை உணர்ந்தோம்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த உரையாடல் கருத்து விவாதமாக மாறியது. எங்களில் ஒருவர், “இயற்கையும், மனிதர்களும் பின்னிப் பிணைந்திருப்பவை பற்றி ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை சுருக்கமாகக் கூறலாமே…” என்றார்.

இயற்கை தொடர்பான செய்திகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பேசினோம். வலது பக்கம் இருந்து எங்களுடைய பேச்சுக்களை தொடங்கினோம்.

முதலாமவர் தண்ணீர் பற்றி பேசினார்.

“நீரின்றி அமையாது உலகு” என்று ஒரு பழமொழி உண்டு. நிச்சயமாக, இது பழமொழி மட்டுமல்ல; நிதர்சமான ஒன்று. இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் நீரைக் கொண்டே தங்களுடைய வாழ்க்கை சூழலைக் அமைத்துக் கொள்கின்றனர். அது விலங்கினங்களாக இருந்தாலும், பறவைகளாக இருந்தாலும், ஜீவராசிகள் அனைத்திற்குமே தண்ணீர் தான் இன்றியமையாத ஒன்று.

அதை இப்பொழுது மக்கள் வியாபாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இது போன்ற நிலைகளை மக்களிடம் இருந்து அகற்றி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கருத்து கூறினார்.

அடுத்து, இரண்டாவது நபர் மண் பற்றி உரையாற்றினார்.

மண் என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்யும் பொருள் மட்டுமல்ல, மண்ணால்தான் மனிதனே படைக்கப்பட்டிருக்கின்றான் என்று இறைவன் கூறுகின்றான்.

மனிதனை நாம் களிமண்ணிலிருந்தே படைத்தோம் என்கிறான் இறைவன். இன்று மணற்கொள்ளை என்பது அதிகமாகி வருவதையும், இதனால் ஆறு, குளம், வாய்க்கால் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய்விட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அடுத்து மூன்றாவது நபர் உரையாற்றினார். அவர் புல்லின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.

புல் இன்று மனிதனின் நோயை தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருக்கின்றது. அருகம்புல் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாம் காலையில் உடற்பயிற்சி செய்ய சென்றால், அங்கு மைதானத்தில் அருகம்புல் சூப் விற்பனை செய்கிறார்கள் என்றார்.

புல்லைக் கொண்டு எவ்வளவோ உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. புல்லைக் கொண்டு  எத்தனையோ வகையான ஆராச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதை சுட்டிக் காட்டினார்.

அடுத்து நான்காவதாக நான் உரையாற்றினேன். எனக்குரிய தலைப்பு மரம். நான் உரையாற்றும்போது “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பார்கள். மரம் என்பது மக்களுக்கு நிழல்தரக் கூடியதாக உள்ளது.

நாம் இன்று நட்டி வைக்கும் ஒரு மரம், அடுத்த தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. நாம் வாழும் இக்காலங்களிலேயே நூறு வருடங்கள், இருநூறு வருடங்கள் வாழ்ந்த மரங்களெல்லாம் நம் முன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. காடுகளில் மரத்தை அழிப்பதன் மூலம், காட்டில் உள்ள விலங்கினங்கள் மனிதர் வாழும் இடங்களை தேடி வருகின்றன. காட்டை அழிப்பதன் மூலம் இயற்கை மாசு ஏற்டுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அடுத்து ஐந்தாவது நபர் மலையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். ஒட்டுமொத்த உலகத்தை சுற்றியும் எவ்வளவோ மலைகள் இருக்கின்றன. இந்த மலைகள் அனைத்தையும் இந்த உலகம் இயங்குவதற்குண்டான பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கின்றன.

பூமியைத் தாங்கி நிற்கக் கூடியதாக மலைகள் இருக்கின்றன. மலைகளைப் பற்றி இன்று எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றார்.

அடுத்து ஆறாவது நபர் காற்று தொடர்பான சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மனிதன் உயிர் வாழ்வதன் மூலக்காரணமே காற்றுதான். காற்று இல்லாமல் இவ்வுலகம் இல்லை. இந்தக் காற்று மூலமாகத்தான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன், வாக்கி டாக்கி இன்னும் தகவல் தொடர்புக்கு இன்றியமையாததாக பயன்படும் பொருட்களுக்கு காற்றுதான் அடிப்படை காரணமாக உள்ளது.

வானத்தில் பறக்கக்கூடிய பறவைகள் காற்று அடிப்பதன் மூலம்தான் பறக்கின்றன. விமானங்கள் குறிப்பிட்ட தூரத்திற்குச் சென்றவுடன் காற்று துணை கொண்டேதான் பறக்கின்றன. விமான விபத்துகள் ஏற்பட்டாலோ, அதில் உள்ளவர்கள் உயிர் பிழைப்பதற்கான மூலக்காரணமாக இருக்கக்கூடிய பாராசூட் காற்றைக் கொண்டே  இயங்குகின்றது.

எஃப்.எம். ரேடியோ போன்ற நமக்கு பயன்படக்கூடியவை கூட இந்தக் காற்றாலைகள் மூலம்தான் இயங்குகின்றன. கடலில் அலைகள் ஏற்படுகின்றது. இதைக்கூட காற்றுத்தான்  தள்ளிக் கொண்டு வருகின்றது தான் என்பதை நாம் உணர வேண்டும்.

காற்றில் மூலம் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய சில அழிவுகளும் இருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும் என்றார்.

இப்படி எங்களுடைய பயணம் இயற்கையின் ஊடே ஒன்றிப்போன பயணமாக மாறியது. இந்தச் சிறு அமர்வு மூலம் இயற்கை தொடர்பான நன்மை, தீமை பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டோம்.

உலகத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களும், ஆராய வேண்டிய இடங்களும் எவ்வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் நாம் ஆராய வேண்டும். அதில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்திலேயே இதுபோன்ற சுற்றுலாத்தளங்கள் நிறைய இருக்கின்றன. அதைப் பராமரிப்பதில் தான் அரசுகள் கவனம் எடுத்து, அதைப் பராமரிக்கத் தவறி விடுகின்றன.  அண்டை மாநிலமான கேரளாவில் சுற்றுலாத்தளங்களை பராமரிப்பதில் கேரள அரசு மிகவும் கவனமாகச் செயல்படுகின்றது.

வரும் காலங்களில் தமிழகத்திலும் அதுபோன்று கவனம் செலுத்தி சுற்றுலாத்தலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே நமது பயணக் குழுவின் வேண்டுகோள்!

மகாபலிபுரம் பயணக்குழு

தொகுப்பு: நெல்லை சலீம்

 

 

 

 

 

 

Leave a Reply

Top