You are here
Home > Uncategorized > பேச்சுவார்த்தை தோல்வி:அஸாஞ்சேவுக்கு ஈக்வடாரின் அபயம் தொடரும்!

பேச்சுவார்த்தை தோல்வி:அஸாஞ்சேவுக்கு ஈக்வடாரின் அபயம் தொடரும்!

லண்டன்: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு அரசியல் புகலிடம் தொடரும் என்று ஈக்வடார் வெளியுறவுத்துறை அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ தெரிவித்துள்ளார்.

அஸாஞ்சேவை லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் இருந்து வெளியேற்றுவதுக் குறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக்குடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரிக்கார்டோ இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவருட காலமாக அஸாஞ்சே ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தூதரகத்தில் தங்கியிருக்க அஸாஞ்சே தயாராக உள்ளார் என்று ரிக்கார்டோ தெரிவித்தார். அஸாஞ்சேவை வெளியேற்றவேண்டும் என்ற ஹேக்கின் கோரிக்கையை பாட்டினோ நிராகரித்துவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடரும் என்று அவர் கூறினார்.

பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணை செய்ய அஸாஞ்சேவை ஒப்படைக்கவேண்டும் என்று சுவீடன் கோரிக்கை விடுத்தது.இந்நிலையில் அஸாஞ்சே ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அரசியல் புகலிடம் தேடினார். சுவீடனிடம் அஸாஞ்சேவை ஒப்படைத்தால் அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்ற ஊகம் நிலவுகிறது. தூதரகத்தில் இருந்து அஸாஞ்சே வெளியேறினால் பிரிட்டீஷ் போலீஸ் அவரை கைதுச் செய்யும். அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அஸாஞ்சே.

Leave a Reply

Top